கவின் தமிழ்ச் செல்வர் கணக்காசிரியர்
கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு,
இனியன் எழுதும் இனிய மடல். நலம். நலமே சூழ்க. நன்றே வாழ்க.
நீங்கள் பல ஊர்களுக்கும் சென்று
மறக்கப்பட்ட மாமனிதர்களின் சிறப்புகளை வெளிக்கொணர்ந்து வலைப்பக்கத்தில் வரைந்து
காட்டுகிறீர்கள். வாய்ப்பு நேருமாயின் சிதம்பரம் என்னும் தில்லையம்பதிக்குச்
செல்லுங்கள். கூடவே முனைவர் ஜம்புலிங்கம் அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள்.
தகவல்களைச் சேகரித்துத் தக்கவாறு வலைப்பக்கத்தில் எழுதுங்கள்.
சிதம்பரம் செல்வதற்குமுன் தகவல்
அறியும் உரிமையைப் பயன்படுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மடலும் எழுதுங்கள்.
இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவர்
சிதம்பரத்தில் தங்கி அருந்தமிழை அரும்பாடுபட்டு வளர்த்திருக்கிறார். அவர் பெயராலே ஒரு
அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியும் அங்கு உள்ளது.
இவர் வாழ்ந்த வீடு எங்கு இருக்கிறது
எப்படி இருக்கிறது என்ற விவரம் அந்த ஊர்க்காரர்களுக்குத் தெரியவில்லை. இவர்
சிதம்பரத்தில் அமைத்த சைவப் பிரகாச வித்யாசாலை பின்னாளில் என்னாயிற்று என்றும்
தெரியவில்லை.
18.12.1822 அன்று யாழ்ப்பாணத்தில்
பிறந்த அவர் அதே ஊரில் 5.12.1879 அன்று
மறைந்ததாக வரலாறு சொல்கிறது. இவர் பல்லாண்டுகள் சென்னையிலும் சிதம்பரத்திலும்
வாழ்ந்து சைவத்தையும் தமிழையும் ஒரு சேர வளர்த்துள்ளார்.
இவர் தமிழ் மொழிக்குத் தந்த கொடை என்ன
தெரியுமா?
முதன் முதலில் குறியீட்டு இலக்கணம்
வகுத்தவர் இவரே. ஆங்கிலேயர் பயன்படுத்திய நிறுத்தற் குறியீடுகளை வரைமுறைப்படுத்தி
தமிழில் புகுத்தினார். உரைநடையில் நிறுத்த வேண்டிய இடத்தில் தக்கவாறு காற்புள்ளி, அரைப்புள்ளி,
முக்காற்புள்ளி, புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி, மேற்கோள் குறி,
அடைப்புக்குறி, உடுக்குறி மற்றும் பிற நிறுத்தல் குறியீடுகளை இட்டு, உணர்ச்சி
மேலிட எழுதவும் வாசிக்கவும் செய்தவர் இவரே என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
திரிசிரபுரம் மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் ஆழ்ந்த நட்பு கொண்டவர் இவர். ஒருமுறை இருவரும்
சீடர்கள் புடைசூழ கொள்ளிடத்தில் அதிகாலையில் மார்கழிக் குளிரில்
நீராடிக்கொண்டிருந்தார்களாம். அப்போது பிள்ளையவர்கள், “பனிக்காலம் கொடிது’
என்றாராம். இவர் சும்மாயிருக்காமல், “பனிக்காலம் நன்று” என்று சொல்ல, சீடர்கள்
திகைத்தார்களாம்! “நான் ஒன்றும் பிள்ளையவர்கள் கருத்துக்கு மாறாகச் சொல்லவில்லையே.
பனிக்கு ஆலம் நன்று அதாவது இந்த மார்கழிப் பனிக்கு ஆலம் எனச் சொல்லப்படும் விஷமே
நன்று என்றுதான் சொன்னேன்” என விளக்கம் தந்ததும் பிள்ளையவர்களே வியந்து
நின்றாராம்!
இதைவிட பெரிய கூத்து அன்றைய
சென்னையில் நிகழ்ந்தது.
உயர்நீதி மன்றத்தில் சான்றாளர்
கூண்டில் நிற்கிறார் இவர். தொள தொளா சட்டை, வேட்டியில் நின்ற இவரிடம் அக்காலத்து
ஆங்கிலேய நீதிபதி, “ அந்த ஆளை எப்போது பார்த்தீர்கள்?” என்று ஆங்கிலத்தில்
கேட்டுவிட்டு, இவரது தோற்றைத்தைக் கண்ட அவர், “நீங்கள் தமிழிலேயே சொல்லுங்கள்.
எங்கள் எழுத்தர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்வார்” என்று கூறுகிறார். இவர்,
“அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம்பனைத்தே காலேற்றுக் காலோட்டப்
புக்குழி...” என்று தனித் தமிழில் பேசத் தொடங்கியதும் எழுத்தருக்கு மயக்கம்
வந்துவிட்டதாம். சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை
முன்னர், கடற்கரையோரம் காற்று வாங்கச் சிறுநடையாய்ப் புறப்பட்டபோது.. என்பதுதான்
அவர் சொன்னதன் பொருள்!
பிறகு சுதாரித்துக்கொண்ட நீதிபதி
ஆங்கிலத்தில் பேச அனுமதித்ததும் அழகான ஆங்கிலத்தில் மடை திறந்தாற்போல் நடந்ததைச்
சொல்லிவிட்டு நடந்தாராம். We should not judge the book by its cover என்று முணுமுணுத்தாராம் அந்த ஆங்கிலேய நீதிபதி.
அதைத்தானே நம் பூட்டாதி பூட்டன் வள்ளுவன் உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று
அப்போதே சொன்னான்!
இவர் இவர் என்று சொன்னேனே. யார்
இவர்?
யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்.
தமிழர் திருநாளில் மறந்துவிட்ட மாத்தமிழ் அறிஞரை நினைவுபடுத்தி உள்ளேன்.
உங்களுக்கும் வலைப்பூ நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
இனிய அன்புடன்,
இனியன், அமெரிக்காவிலிருந்து.
தங்களின் வலை மடல் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
ReplyDeleteஅவசியம் முயற்சி செய்கிறேன்
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
இலங்கையைச் சேர்ந்த இந்தத் தமிழரைப் பற்றி அறிந்துகொள்ள தமிழ் கூறும் நல்லுலகு ஆவலாயுள்ளது. நன்றி
ReplyDeleteநல்ல சிந்தனைச் செய்தி.திருமிகு.கரந்தை ஜெயக்குமார் அவர்களது பணிகளை அறியச் செய்துள்ளீர்கள். அவர்களைப் பற்றித் தங்கள் பதிவின் பக்கத்தில் தான் அறியமுடிகிறது. அவரது வலைப்பக்க முகவரி தெரிந்தால் நானும் என்னைப்போல் பிறரும் படித்துப் பயனடைவோம். அருந்தமிழ் வளர்த்த அயல்நாட்டார் என்ற தலைப்பில் யாழ்பாணம் ஆறுமுக நாவலர் பற்றிய செய்திகளைப் பதிவிட்டுள்ளீர்கள். இன்றைய மாணாக்கர்கள் குறியீட்டு முறைகளை அறிந்து வைத்திருப்பதில்லை. அதிலும், எந்த குறிகள் எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என அறியவும் விரும்புவதில்லை. தமிழண்ணல், சி.பா., போன்றவர்கள் தற்காலத்திற்கு ஏற்றவாறு ஆராய்ச்சி நெறிகள், ஆய்வியல் நெறிமுறைகள் என்னும் தலைப்பில் நூலாக வழங்கியுள்ளனர். எப்படியிருப்பினும் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களை உலகிற்கு அடையாளப் படுத்தவேண்டும். இப்பணியை திரு.கரந்தை.ஜெயக்குமார் அவர்கள் செய்வார்கள் என் நம்புகிறேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுனைவர் ரா.லட்சுமணசிங்
பேராசிரியர்
அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
கரூர் - 5
ஆறுமுக நாவலர் பற்றிக் கேட்டதுண்டு ஆனால் தங்கள் பதிவின் மூலம் அவரது சில சிறப்புகளையும் அறிய நேர்ந்தது. கரந்தை சகோவிடம் சொல்லியாயிற்று இல்லையா!! அவர் செவ்வனே முடித்துவிடுவார்.
ReplyDeleteகீதா
ஐயா, உங்கள் கட்டுரைகளைப் படிக்கும் போதுதான் எனக்கும் சிறிது தமிழில் எழுதவருகிறது. தமிழ் சான்றோர்கள் பலபேர் வாழ்ந்தார்கள் என்பதை தமிழை முன்னிருத்தும் தமிழ்த் தீவிரவாதிகள் அழித்து வருகின்றனர்.
ReplyDelete