மகாத்மா காந்தி இலண்டனில் நடந்த
வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றார். அவர் உலகத் தலைவர்களில் ஒருவராக
இருந்ததால், மாநாடு முடிந்ததும் அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு பலவேறு
வினாக்களைக் கேட்டனர். நிறைவாக ஒரு நிருபர், “நீங்கள் நாட்டு மக்களுக்கு
விடுக்கும் செய்தி என்ன?” என்று கேட்டார். காந்தியடிகள் சற்றும் தாமதிக்காமல், “My life is my message“ என்று
சொன்னார். இப்படி என் வாழ்வே என் செய்தி என்று சொல்வதற்கு முற்றிலும்
தகுதியுடையவர் அவர். இன்றையத் தலைவர்கள் யாரேனும் இப்படிச் சொன்னால் சிறந்த நகைச்சுவை
என்று சிரிக்கலாம்.
கல்லாத எளிய மனிதர்கள் கூட
பின்பற்றத்தக்க நல்ல வழக்கங்கள் பல காந்தியடிகளிடம் இருந்தன.
பொதுப் பணத்தைக் கையாள்வதில் அவர்
கண்டிப்பானவர்; கை சுத்தமானவர் என்பது உலகறிந்த செய்தி. ஆனால் ஏனோ நம் அரசியல்
தலைவர்களும் அதிகாரிகளும் அவரை முழுமையாகப் பின்பற்றவில்லை. இங்கே நான் சொல்ல
வந்தது இதனுடன் தொடர்புடைய வேறு செய்தி. இன்னொரு வகையிலும் அவர் கை சுத்தமானவர்.
காந்தியார் விடுதலைப் போராட்டங்களுக்குப்
பொதுமக்கள் நன்கொடையாகத் தரும் காசு பணத்தை இரு கரம் நீட்டிப் பெற்றுக்கொண்டு
நன்றி கூறுவார். பிறகு அவற்றை எண்ணிக்
கணக்கை முடிப்பார். அதன் பிறகு தம் இரு கைகளையும் சோப்பு போட்டு நன்கு கழுவுவார்.
பலரும் தொட்டுக் கையாண்ட பணத்தைத் தொடுவோர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல
பழக்கமாகும் இது.
கிருமித் தொற்றுக்குக் காரணமான பல பொருள்களில்
பணம் காசு முக்கியமானதாகும். எச்சிலைத் தொட்டுப் பணம் எண்ணும் வழக்கமுடைய மக்கள்
பலராக உள்ள நம் நாட்டில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சுற்றுப்புறத் தூய்மையை நன்கு பராமரிக்கக்கூடிய
வழக்கம் உடையவர் காந்தியடிகள். ஒருசமயம் காந்தியடிகள் உதகைக்கு வந்திருந்தார்.
இரவு எல்லோருடனும் சேர்ந்து உணவருந்தினார். அதிகாலையில் எழுந்துப் பார்த்த
தொண்டர்களுக்கு அதிர்ச்சி. காந்தியடிகளை எங்குத் தேடியும் காணவில்லை. ஒரு தொண்டர்
புழக்கடைப் பக்கம் ஓடிப்போய்த் தேடினார். காந்தியார் அங்கே குவிந்து கிடந்த
எச்சில் இலைகளைப் பொறுக்கி எடுத்து ஒரு குழியில் போட்டு மண்ணப்போட்டு நிரப்பிக்
கொண்டிருந்தார். முதல்நாள் இரவில் ஒரு தொண்டர் எடுத்துப் புழக்கடைப் பக்கம் வீசியிருந்த
இலைகள்தாம் அவை. இன்றைக்கும் திருமண விருந்துகளின்போது எச்சில் இலைகள் தெருவில்
உள்ள நகராட்சிக் குப்பைத்தொட்டியைச் சுற்றிக் கொட்டப்படுவதைப் பார்க்கிறோம்.
காந்தியார் சிறுவனாக இருந்தபோது
பள்ளியில் நடந்த நிகழ்வு உங்களுக்குத் தெரியும். தன் ஆசிரியரே தூண்டியபோதும்
பக்கத்துப் பையனைப் பார்த்து எழுதவில்லை.”நான் காப்பியடிக்கும் வித்தையை ஒரு
போதும் கற்றுக் கொண்டதில்லை” என்று பின்னாளில் தாம் எழுதிய சத்திய சோதனை நூலில்
குறிப்பிடுகிறார். நம் பிள்ளைகள் இந்த ஒன்றையாவது பின்பற்ற வேண்டும் என நாம்
வலியுறுத்தக் கூடாதா?
காந்தி பிறந்த நாட்டில் பிறந்தவர்கள் என்பதில் நமக்குப் பெருமையில்லை. அவரிடமிருந்து
அகம், புறம் இரண்டையும் தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி என்று கற்றுக்
கொள்வதில்தான் பெருமை இருக்கிறது.
Photo Courtesy: Google Images
காந்தியைப் பின்பற்றுவோம் ஐயா
ReplyDeleteகாந்தி. அவருடைய சத்திய சோதனையைப் படித்தபோது நான் இன்னும் என்னை திருத்திக்கொள்ளவேண்டியது அதிகம் உள்ளது என்று நினைத்துக்கொண்டேன்.
ReplyDeleteதேசத் தந்தையின் நினைவு நாளில் அவர்தம் கருத்துக்களை நினைவுகூர்வது சிறப்பு.
ReplyDelete"என் வாழ்வே என் செய்தி" என்று 32 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் நீங்கள் சொல்ல, நான் பள்ளியில் கரும் பலகையில் எழுதியது நினைவில் நிற்கிறது.
அது ஒரு பொற்காலம்
Deleteவள்ளுவத்தை முழுமையாகப் பின்பற்றிய மாமனிதன் அண்ணல் காந்தியடிகள் மட்டுமே!
ReplyDeleteநாம் காந்தியிடமிருந்து கற்க வேண்டியது நிறையவே உள்ளது ஐயா. வாழ்க எம்மான்!
ReplyDeleteகீதா: செய்தித்தாளாக இருந்தாலும் சரி, ரூபாய் நோட்டாக இருந்தாலும் சரி, பயணச் சீட்டு, எதுவாக இருந்தாலும் அதைத் தொட்டால் கையை நன்கு கழுவிக் கொள்வார். ஆசாரம் என்று சொல்வார்கள். பின்னர்தான் எனக்குத் தெரிந்தது அது சுத்தத்திற்காக என்று. அவர் சொல்லுவார் பயணச்சீட்டு ரூபாய்தாள் எல்லாம் எல்லாரும் எச்சல் தொட்டுக் கிழித்தல், எண்ணுதல் என்று செய்கிறார்கள். செய்தித்தாளில் அந்த அச்சு கையில் கறுப்பு படும் அது நல்லதில்லை என்பார். அதனாலேயே வீட்டில் அப்பளம், சப்பாத்தி எல்லாம் தேய்த்து தட்டில் அல்லது முறத்தில் பரப்புவாரே தவிர பழைய செய்தித்தாள் எதுவும் எதற்கும் பயன்படுத்தமாட்டார். அப்பழ்க்கம் எனக்கும் அப்படியே வந்துவிட்டது. பாட்டி எல்லாம் காந்தியடிகள் வாழ்ந்த காலம் அல்லவா காந்தியிடம் கற்ற பாடமாக இருக்கும்!!
அருமை.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி
Deleteஐயா, காந்தியின் மேல் எனக்குப் பெரும் பற்றோ அல்லது அவரது கொள்கைகளைப் பற்றியோ பெரிய ஈடுபாடு இல்லை. ஏனெனில் நான் அந்தமான் சென்று வந்தபின் காந்தியார் செய்தது ஒன்றும் பெரிய செயல் இல்லை என்பது புரிந்தது. ஆனால் இதில் நீங்கள் குறிப்பிட்ட தூய்மையை பேணுவதென்பது மிகவும் முக்கியமான ஒன்று. நன்றி ஐயா.
ReplyDeleteஐயா, காந்தியின் மேல் எனக்குப் பெரும் பற்றோ அல்லது அவரது கொள்கைகளைப் பற்றியோ பெரிய ஈடுபாடு இல்லை. ஏனெனில் நான் அந்தமான் சென்று வந்தபின் காந்தியார் செய்தது ஒன்றும் பெரிய செயல் இல்லை என்பது புரிந்தது. ஆனால் இதில் நீங்கள் குறிப்பிட்ட தூய்மையை பேணுவதென்பது மிகவும் முக்கியமான ஒன்று. நன்றி ஐயா.
ReplyDeleteதனிமனித ஒழுக்கம் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர்க்கு மிகவும் இன்றியமையாத ஒன்று காந்தியடிகளுக்கு தன் வாழ்க்கையை ஒரு செய்தியாக அறிவிக்கும் துணிச்சல் இருந்தது இன்றைய அரசியல்வாதிகள் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோர் ஒரு சதவிகிதம் பின்பற்றினாலும் இந்த நாடு மேன்மையுறும். இது நடக்குமா?
ReplyDeleteநடக்கும் என நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கையின் அடிப்படை!
Delete