Thursday, 25 January 2018

சிரம் தாழ்த்தினேன் சீனக் கலைஞர்களுக்கு

   ஷென் யூன் நிகழ்த்துக் கலைக்குழு(Shen Yun Performing Arts) என்பது சீன நாட்டின் புகழ் பெற்ற பாரம்பரிய கலைக்குழுக்களில் முதன்மையானதாகும். இவர்கள் அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் நிகழ்த்துக்கலை பயிற்சிக் கல்லூரி ஒன்றைச் சிறப்பாக நடத்துகிறார்கள்.  உலகம் முழுவதும் சென்று முக்கிய நகரங்களில் முகாமிட்டுக் கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

   ஐயாயிரம் ஆண்டுகள் பழமையுடைய சீன தேசத்தின் நாட்டுப்புறம் மற்றும் செவ்வியல் கலைகளை, இசையால் மெருகேற்றி நடனமாகவும், நாடகமாகவும் காட்சிப்படுத்துகிறார்கள்.

   பேரழகின் பெட்டகமாய்த் திகழும்  பதின்ம வயது இளம்பெண்கள் இக் குழுவில் பலராக உள்ளனர். ஒல்லியான, உயரமான, அழகான இளஞர்கள் இவர்களுடன் சேர்ந்து மேடையை ஆளுகிறார்கள்.

    இருபது இசைக் கலைஞர்கள் மேடைக்கு முன்புறம் பார்வையாளர்களுக்குத் தெரியாமல் சற்றுத் தாழ்வான பகுதியில் அமர்ந்து இசைமழை பொழிகிறார்கள்.

    இனி மேடையைப் பார்ப்போம். அறுபது அடி நீளமும் நாற்பது அடி அகலமும் கொண்ட பெரிய மேடை. அதன் பின்புலத்தில் அறுபது அடி நீளமும் முப்பது அடி உயரமும் கொண்ட வெண்திரையும், அதனை ஒட்டி அதே அளவில் முப்பது அடிக்கு முன்னால் ஒரு கரந்துவரல் எழினியும் அமைந்திருக்கின்றன.

  ஒப்பனை அறையிலிருந்து கலைஞர்கள் மேடைக்கு வருவதற்கு இரு பக்கமும் நுழை வாயில்கள் உள்ளன. உலகில் வேறெங்கும் இல்லாத ஓர் அமைப்பு இந்த மேடையில் உள்ளது. திரையை ஒட்டி மேடையின் நீளத்திற்கு மூன்று சிறிய அழகிய படிக்கட்டுகள் மேடையில் இறங்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளன. மேடையில் இயங்கும் கலைஞர்கள் இந்த படிக்கட்டுகளில் ஏறி அப்படியே திரையை ஒட்டி உட்புறமாக குதிக்க முடியும். அல்லது  படிக்கட்டுகளில் இறங்கி பக்கவாட்டில் ஒப்பனை அறைக்குச் செல்ல முடியும். காட்சிக்கு ஏற்ப அந்த வழியாக கண் இமைக்கும் நேரத்தில் மேடையில் களம் இறங்குகிறார்கள்.

  சரி மேடையில் ஆடுவோர்க்கு எதற்குப் பின்னணியில் வெண்திரை என்கிறீர்களா?

   இனிமேல்தான் நீங்கள் கவனமாகப் பார்க்க வேண்டும். ஒரே சமயத்தில் மேடையில் கலைஞர்கள் ஆட, திரையில் காட்சிகள் ஓட அரங்கமே கரவொலியில் அதிர்கிறது. புரியவில்லை?

    திரையில் ஒரு தேவலோகக் காட்சி. மேகங்களுக்கு இடையே அழகு தேவதைகள் பன்னிருவர் பறந்துவந்து மெல்ல ஒய்யாரமாக இறங்கி திரையிலிருந்து நேரே மேடைக்கு வந்து ஆடுகிறார்கள்.

    உங்களுக்குப் புரியும்படி சொல்கிறேன். மோகனும் அவனுடைய கல்லூரித் தோழனும் வீட்டுக்கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சிப் பார்க்கும்போது, தொலைக்காட்சித் திரையில் நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென்று முன்னால் குதித்து  வீட்டுக் கூடத்தில் நடனமாடினால் அவர்களுக்கு எப்படியிருக்கும்? “அப்பா பார்த்தால் எங்களைத் திட்டுவார். ஓடிப்போய் விடு” என்று மோகன் அலற, அதே நேரத்தில் தொலைக்காட்சித் திரையில் ஒரு சொகுசுக்கார் வந்து நிற்க, கூடத்தில் ஆடிக்கொண்டிருந்த அழகி  ஓடிப்போய்  அந்தக் காரில் ஏறி  டாட்டா காட்டிவிட்டுப் போனால் எப்படியிருக்கும்! கற்பனை செய்து பாருங்கள். அப்படித்தான் திரைக்காட்சியையும் மேடைக்காட்சியையும் ஒருங்கிணைத்து இரண்டுமணி நேரம் நோக்கர்களைத் திணறடித்துவிட்டார்கள்.

     மேடையில் ஒரு வேடன் வில்லும் அம்புமாய்த் திரியும் வேளையில் திரையில் தெரியும் அழகிய வனத்தில் ஓர் அழகு மான் துள்ளித் திரிகிறது. கண் இமைக்கும் நேரத்தில் மேடையில் நின்ற இராமன் திரையில் திரிந்த மானின் பின்னால் ஓடுகிறான்! அந்த ஒரு விநாடி நேரத்தில், நான் முன்னர்க் குறிப்பிட்ட படிகளில் ஏறி கீழே குதித்து ஒப்பனை அறைக்கு ஓடிவிடுகிறான் நிஜ இராமன். அந்தக் கண நேரத்தில் மேடையில் தோன்றிய இராமனின் ஒப்பனையுடன் திரை இராமன் மானுக்குப் பின்னால் ஓடுகிறான்! மான் தப்பிவிடுகிறது. இவன் படு பாதாளத்தில் விழுந்து ஒரு குகையினுள் சென்று மீண்டு, மீண்டும் திரையின் அடிப்பகுதியிலிருந்து மேடையில் குதிக்கிறான்!


   மேடையில் நடித்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவன் ஓடிச்சென்று திரையில் தோன்றும் குளத்தில் திடுமெனக் குதித்து மூழ்கிவிடுவதைப் பார்க்கிறேன். அப்படியே திரும்பி என் இருக்கைக்கு இருபுறமும் பார்க்கிறேன். அத்தனைப் பேரும் மூக்கின்மேல் விரலை வைத்தபடி நாற்காலியின் விளிம்பில் அமர்ந்திருக்கிறார்கள் என்னை மாதிரியே!




மேடைக் காட்சி, திரைக்காட்சி, கருவி இசை மூன்றையும் சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் இணைப்பதுதான் இந்த ஷென் யூன் குழுவின் விசேட தொழில் நுட்பம்(Integrating Digital Background with Stage Performance). இந்த நுட்பத்தை யாரும் பயன்படுத்த முடியாத வகையில் காப்புரிமையும் பெற்றுவிட்டார்கள். இதை யாரும் போட்டோ, வீடியோ எடுத்துவிடக்கூடாது என்று தடை விதித்துள்ளார்கள். வாயிலில் சோதித்துதான் நம்மை உள்ளே அனுப்புகிறார்கள். காட்சி நடக்கும்போதும் அவர்களுடைய ஆள்கள் நோக்கர்களைக் கண்காணித்தபடி உள்ளார்கள். இங்கே நான் இணைத்துள்ள படங்கள் அவர்கள் கொடுத்த ஒரு சிறுநூலில் உள்ளவைதாம்.

   மூன்று நிமிட நேர நடனத்தில் முப்பது விதமான அசைவுகளை முப்பது பெண்களும் ஒரே மாதிரியாக அணுவளவும் பிசகாமல் செய்து காட்டுகிறார்கள். எல்லாம் இசைக்கேற்ப வேக கதியில் நிகழ்கின்றன. உடலும் மனமும் ஒருங்கிணைவதால் அவர்களுக்கு இது சாத்தியமாகிறது.
  காட்சி விளக்கத்தை ஓர் அழகிய இளம்பெண் முதலில் சீன மொழியில் தேனொழுகும் குரலில் சொல்கிறாள். அதை ஓர் இளைஞன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறான். அவர்களுடைய மொழிக்கு முதலிடம் கொடுக்கிறார்கள்! ஒரு காட்சிக்கும் அடுத்த ஒரு காட்சிக்கும் இந்த ஒரு நிமிட இடைவெளிதான். இரண்டு மணிநேரம் இரண்டு நிமிடங்களாகக் கரைந்து போனது.

   பெண் கலைஞர்களிடத்தில் ஆடைக்குறைப்பு என்பது அறவே இல்லை. குதிகால் வரை கீழாடை, கழுத்துவரை மேலாடை என அவர்களுடைய உடைப்பண்பாடு உயர்தரமாய் இருந்தது. அவர்கள் மேடையில் தோன்றும்போது நோக்கர்கள் விசிலடிக்கவில்லை; விதவிதமான கூச்சல் எழுப்பவில்லை. அமைதியாகப் பார்த்து வியந்து ஒவ்வொரு நிகழ்வின் நிறைவில் நீண்ட கரவொலி எழுப்பிய நனி நாகரிகம் பாராட்டுக்குரியதாக இருந்தது. இத்தகைய ஒழுங்கு நம்மூர் நோக்கர்களிடத்தில் இல்லை என்பதில் எனக்கு வருத்தம்தான்.

    இங்கே டெல்லாஸ் நகரில் பதினைந்து நாள்களுக்கு மட்டும் நடந்த இந்தக் காட்சிக்கான நுழைவுக்கட்டணம் ஒருவருக்கு நூற்று ஐம்பது டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் பத்தாயிரத்து ஐந்நூறு ரூபாய்!

  நுழைவுச் சீட்டு கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. நெருங்கிய உறவினர் டாக்டர் பொ.சங்கரபாண்டியன் அவர்களின்  முயற்சியில் கடைசி நாளில் இந்த வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் அமெரிக்கா வரும்போதெல்லாம் அவர் இப்படியொரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து எங்களை வியப்பில் ஆழ்த்துவார். 

  நிகழ்ச்சி நிறைவில் கலைஞர்கள் அனைவரும் சாதனை செய்த களிப்புடன் மேடையில் வரிசைகட்டி நிற்க, கண்டு களித்த ஐயாயிரம் நோக்கர்களும்  எழுந்து நின்று ஒத்திசைவாக கரவொலி எழுப்பினார்கள்.

  நான் சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்தினேன்.

  இந்தியர்களாகிய நாம் சீனாக்காரர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன என்னும் உணர்வோடு அரங்கைவிட்டு வெளியில் வந்து மகிழ்வுந்தை நோக்கி நடந்தேன்.

.........................................
முனைவர் . கோவிந்தராஜூ,

அமெரிக்காவிலிருந்து.

9 comments:

  1. ஆஹா அற்புதம்!
    அருமையான ஒரு கலை நிகழ்ச்சியை
    எங்களுக்கு அளித்தமைக்கு (கட்செவி வழி) நன்றி !
    கரந்துவரல் எழினியும் விளக்கம் தேவை
    ஐயா

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. எழினி என்பது மேடைக்கான திரைச்சீலை ஆகும். இந்தத் திரைச்சீலையால் மேடையை மறைத்து அடுத்தடுத்தக் காட்சிக்குத் தயாராகி நிற்பார்கள். திரை விலகியதும் காட்சி அரங்கேறும்.
    இத் திரைச்சீலை மூன்று வகைப்படும்.
    ஒருமுக எழினி- மேடையின் ஒருபக்கத்திலிருந்து அடுத்தப் பக்கத்திற்கு நகரும்.
    இருமுக எழினி- மேடையின் இரு பக்கத்திலிருந்து ஒரே சமயத்தில் நடுப்பகுதியை நோக்கி நகரும்.
    கரந்துவரல் எழினி- மேடையின் மேல் கூரையிலிருந்து கீழ்நோக்கி மெல்ல இறங்கும்; பிறகு மேல்நோக்கி மெல்ல ஏறும்.
    இந்த நுட்பங்கள் குறித்த செய்திகள் சிலப்பதிகாரம் அரங்கேற்றுக்
    காதையில்
    “........ஆங்கு
    ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
    கரந்துவரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து”

    என்று இளங்கோவடிகளால் பேசப்படுகின்றன.

    ReplyDelete
  4. முனைவர் வில்லவன் வாட்ஸப் மூலமாக அனுப்பிய பின்னூட்டம்
    அம்மம்மா!

    ReplyDelete
  5. TNPL School Teacher Athinathan says through Whatsapp:
    Able to have a cushion in my mind. Such an explanation is given in our beautiful mother tongue. I'm very eager to know that new word karanthuvaral ezhini

    ReplyDelete
  6. TNAU PG student Bowya says through Whatsapp:

    Sir, your post was very nice. You have taken me to the show in US from Coimbatore itself. Thank you sir.

    ReplyDelete
  7. Mr Ramachandran Teacher says through Whatsapp:
    நேரில் பார்த்த அனுபவம் தங்கள் பதிவால் ஏற்பட்டது ஐயா. மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

    ReplyDelete
  8. அருமையான நிகழ்வு ஒன்றைக் கண்டு களித்துள்ளீர்கள் ஐயா. நீங்கள் சொல்லியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும் நேரில் காணும் ஆவலையும் ஏற்படுத்தியது...

    மிக்க நன்றி ஐயா பகிர்விற்கு

    துளசிதரன், கீதா

    ReplyDelete