முதல் ஆளாகச் சென்று வாக்களித்து விடுவது என்று மூன்று நாள்களுக்கு முன் முடிவெடுத்தேன். அதன்படி இன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வாக்குச் சாவடிக்குச் செல்ல ஆயத்தமானேன்.
துணைவியார் வருவதாக இருந்தால் மகிழ்வுந்தில் செல்லலாம் என்று எண்ணினேன். ஆனால்
அவர் வரும் சூழலில் இல்லை என்பதை அறிந்து, நான் என் மிதிவண்டியில் சென்றேன்.
தெருச் சாலைகள் எல்லாம் வழக்கம்போல் இருந்தன. சென்ற தேர்தலின்போது சாலையில்
பல்வேறு சின்னங்களை ஓவியமாக வரைந்து வைத்திருந்தனர்.
சென்ற
வழியில் நான் பார்த்த கட்சித் தேர்தல் அலுவலகங்கள் ஏனோ பூட்டியே கிடந்தன. அவற்றின்
வாயிலில் தெரு நாய்கள் சில விடிந்தது தெரியாமல் உறங்கிக் கிடந்தன.
வாக்குச் சாவடியை நெருங்கியபோது நேரம் காலை 6.30 மணி. வாக்குச் சாவடி ஒரு பள்ளி
என்பதால் வாயிலின் அருகே பரந்த காலியிடம் கண்ணில் பட்டது. அங்கே மிதிவண்டியை நிறுத்த
முயன்றபோது காவல்துறையைச் சார்ந்த காவலர் ஒருவர் ஏதோ செய்யக்கூடாத செயலை நான் செய்வதாக
எண்ணி என்னைத் தடுத்தார். எழுபத்தைந்து வயதுள்ள முதியவர் என்று பார்க்காமல், லத்தியால்
என் மிதிவண்டியின் மீது செல்லமாகத் தட்டி, “இங்கே சைக்கிளை நிறுத்தக்கூடாது. ஆப்போசிட்ல
நிறுத்துங்க.” என்றார். காலையிலேயே போக்குவரத்து அதிகமாக இருந்ததால் சாலையைக் கடப்பதற்குள்
போதும் போதும் என்று ஆகிவிட்டது. அந்த இடத்தில் ஒரு போக்குவரத்துக் காவலரை நிறுத்தியிருக்கலாம்.
ஒருவழியாக ஒதுக்குப்புறமாக என் வண்டியைப் பூட்டி நிறுத்திவிட்டு, மீண்டும் சாலையைக்
கடந்து வாக்குச் சாவடி வளாகத்திற்குள் சென்றபோது மணி 6.50. எனக்கு உரிய வாக்குச் சாவடியை
நானே கண்டுபிடித்து முதல் ஆளாகச் சென்று நின்றேன். பிறகு ஆணும் பெண்ணுமாகப் பலர் வந்து
வரிசையில் சேர்ந்தனர். நமது நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வட இந்தியர்
ஒருவர் பெரிய துப்பாக்கியைத் தோளில் சுமந்தவாறு அங்கே பாதுகாப்புப் பணியில் நின்றார்.
நம்மூர் காவல் துறையினரைக் கொண்டே அறம் பிறழாமல் தேர்தல் நடத்தும் காலம் வராதா என எண்ணினேன்.
பெண்களைத் தனி வரிசையில் நிற்குமாறு ஒரு அலுவலர் அறிவுறுத்தினார். கைப்பேசி
வைத்துக்கொள்ள அனுமதி இல்லை என்றும் சொன்னார். இந்த நடைமுறை எனக்கு முன்னரே தெரியும்.
எனவே நான் கைப்பேசி கொண்டுவரவில்லை. ஆனால் கைப்பேசி கொண்டு வந்த சிலர் வரிசையை விட்டுச்
சென்றனர். இது குறித்து வாயிலில் ஒரு அறிவிப்புப் பலகையை வைத்திருக்கலாம்.
மணி ஏழு ஆகியும் வாக்குப் பதிவு தொடங்கவில்லை. ஐந்து நிமிடம் தாமதமாக வாக்குப்
பதிவு தொடங்கியது. முதலில் வாக்களிக்க பெண் வாக்காளரை அழைத்தனர். வாக்குச் சாவடிக்கு
நான் முதலாவதாக வந்த போதிலும் இரண்டாவது ஆளாக வாக்களிக்க நேர்ந்தது. வாக்காளர்ப் பட்டியலில்
எனது வரிசை எண்ணைச் சொல்லியவாறு வாக்காளர் அடையாள அட்டையை நீட்டினேன். அவர் எனது வரிசை
எண்ணையும், என் பெயரையும் என் தந்தையார் பெயரையும்
உரக்கச் சொன்னார். அங்கே அமர்ந்திருந்த கட்சி முகவர்கள் தலையை ஆட்டி ஆமோதித்தனர். பெண்மணி ஒருவர் என் கையெழுத்தைப் பெற்றார். இன்னொருவர்
என் இடதுகை ஆட்காட்டி விரல் நகத்தின் மீது
மையிட்டார். மறைவான இடத்திற்குச் சென்று அங்கே வைக்கப் பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை
நோட்டமிட்டேன்.
கரூர் சட்டமன்றத் தொகுதியில் 79 பேர்கள் போட்டியிடுவதால் ஐந்து இயந்திரங்கள்
அணி வகுத்தன. உரிய பொத்தானை அழுத்தினேன்; சிவப்பு விளக்கு எரிந்தது. ஒரு சரிபார்ப்புப்
பொறி நான் வாக்களித்த வேட்பாளரின் பெயரைச் சின்னத்துடன் திரையில் காட்டியது. அதைச் சரிபார்த்தபின் அவ்விடத்தை
விட்டு வெளியேறினேன்.
மீண்டும் சாலையைக் கடந்து சென்று என் மிதிவண்டியைத் தேடினேன். ஒரு மானைப் பல
சிங்கங்கள் சூழ்ந்து கொண்டதைப் போல, மிதிவண்டியை உரசிக்கொண்டு முன்னும் பின்னும் பக்கத்திலும்
பல பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு வந்த இளைஞரின் உதவியோடு என் மிதிவண்டியை
எடுத்துத் தட்டிக் கொடுத்தேன்.
வாக்களிக்கும் கடமையை முடித்துத் திரும்பிய என்னை என் துணைவியார் வரவேற்றுத் தன் கைப்பேசியில் ஒரு படமும் எடுத்துத் தந்தார்.
முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

ஜனநாயகக் கடமையை பதிவு செய்து அதை ஒரு சிறப்பு தொகுப்பாக வழங்கியது மிகவும் அருமை ஐயா 👌
ReplyDelete