Wednesday, 1 April 2026

வள்ளுவர் பார்வையில் வடிகட்டிய முட்டாள்

    இன்று உலக முட்டாள்கள் நாள். வள்ளுவர் பார்வையில் யாரெல்லாம் முட்டாள்கள் என அறிவதற்கு என் மனம் விழைந்தது. அதன் விளைவுதான் இப்பதிவு.

    முட்டாள் தனம் பற்றித் தனி அதிகாரம் வகுத்துள்ளார் என்பதே இப் பதிவின் தலைப்புச் செய்தியாகும். வியப்பாக உள்ளதா? 84 ஆவது அதிகாரம் பேதைமை. முட்டாள்களுக்கே உரிய சிறப்புகளையெல்லாம் பட்டியலிடும் அதிகாரம் இது. பத்துக் குறட்பாக்களில் சொல்லி முடிக்க இயலாமல், வேறு சில இடங்களிலும் முட்டாள்களின் புகழ் பாடுகிறார்!

   இப் பதிவை முழுமையாகப் படித்தால் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் முட்டாள் பட்டம் பெற வேண்டியிருக்கும்! அதனாலென்ன முட்டாள் பட்டத்தைத் துறந்துவிட்டு விரைவில் அறிவர் பட்டம் பெற முயலுவோம்.

   வடிகட்டிய முட்டாள் என்பது வள்ளுவர் தரும் பெரும்பட்டம். ஒருவன் நன்மை தரக்கூடியதை ஒதுக்கிவிட்டு, தீமை தரக்கூடியதை விடாது பிடித்துக் கொண்டால் அவன்தான் வடிகட்டிய முட்டாளாம். நாள்தோறும் ஒரு குவளை பால் குடித்தால் நல்லது என்கிறார் மருத்துவர். அவனோ நாள்தோறும் ஒரு பாட்டில் மது அருந்துகிறான். அவனுடைய மனைவி ‘முட்டாளா இருக்கிறியே’ எனப் பட்டம் கொடுக்கிறாள். (குறள் 841)

    முட்டாள்கள் செய்யும் முட்டாள்தனமான செயல்களைப் பட்டியலிட்டு அவற்றைத் தரவரிசைப் படுத்துகிறார் வள்ளுவர். அவற்றுள் முதல் இடம் பிடிப்பது எது தெரியுமா? அது மாயவலை என அறிந்தும் அதில் ஆர்வக் கோளாறு காரணமாகத் தொடர்ந்து ஈடுபட்டுத் தன் கைப்பொருளை இழத்தல். (குறள் 842,932)

    ஒரு முட்டாளை முட்டாள் என இனங்காண்பது எப்படி? ஒரு நான்கு குணங்களில் ஒன்றோ பலவோ அவனிடத்தில் இருந்தால் அவனே முட்டாள் என்பார் வள்ளுவர். அந்த நாலும் எவை? பண்பாடற்ற செயலைச் செய்வதற்கு வெட்கப்படாமை, நல்லவற்றில் நாட்டம் இன்மை, நல்லவற்றில் பற்றின்மை, நல்ல வழக்கத்தில் முதலில் தலைப்பட்டாலும் தொடர்ந்து பேணாமை.(குறள் 843)

    ‘உலகப் பெருமுட்டாள்’ என ஒருவனைச் சுட்டுகிறார் வள்ளுவர். தான் அறநூல்களைக் கற்பான்; பிறருக்கும் அதை அழகாய் எடுத்துச் சொல்வான்; ஆனால் அவன் மட்டும் அதன்படி நடக்காமல் தறிகெட்டு அடங்காமல் திரிவான்.(குறள் 844)

    முட்டாள் ஒருவனுக்கு பெரும்பொருள் கிடைத்தால் என்ன செய்வான்? வள்ளுவரிடம் கேட்டேன். அவர் சொல்கிறார்: அறிவுடைய ஒருவனுக்குப் பெருஞ்செல்வம் கிடைத்தால் அதனை ஆக்க வழியில் செலவிடுவான். ஒரு முட்டாளுக்குக் கிடைத்தால் தனக்குத் தொடர்புடைய நண்பர், உறவினர்க்குச் செலவிட மாட்டான். மாறாக வேறு யார் யாருக்கோ கொட்டிக்கொடுப்பான்.(குறள் 837)

  பிறன் மனைவியைப் பிறழ்மனத்தோடு நோக்கும் ஒருவனுக்கும் முட்டாள் பட்டம் சூட்டுகின்றார் வள்ளுவர்.(குறள் 141)

    இத்தனையும் சொல்லிவிட்டு, ஒரு முட்டாளை அழைத்து அருகில் அமரவைத்து ஓர் ஆறுதலான செய்தியையும் வள்ளுவர் சொல்கிறார். “நீ அறிவாளிதான். ஆனால் சிலசமயம் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறாய். உன் அறிவை வேலை செய்யவிடாமல் தடுப்பது உன் தலைவிதிதான்.” (குறள் 372)

   இந்த அளவில் முட்டாள் புராணம் போதும்  என நினைக்கிறேன். அடுத்த ஆண்டு இதே நாளில் பேசுவதற்குக் கொஞ்சம் மீதி வைப்போம்.

 

முனைவர் .கோவிந்தராஜூ,

மனநல ஆலோசகர்.

   

1 comment: