Monday, 19 June 2023

கடையில் கிடைக்காத காஞ்சிபுரம் இட்லி

  இதுவரை பல நூல்களுக்கு நூல் மதிப்புரை எழுதியுள்ளேன். பல திரைப் படங்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன். ஆனால் இப்போது என் மனைவி சுட்ட புதுமையான  புதுவகையான இட்லிக்கு விமர்சனம் ஒன்றை எழுதுகிறேன்.

Wednesday, 7 June 2023

தென்காசிச் சங்கமம்

  இடையிடையே அரசியல் வாடை வீசிய காசிச் சங்கமத்திற்குச் செல்லும் வாய்ப்பிருந்தும் நான் செல்லவில்லை. ஆனால் முழுக்க முழுக்க இலக்கிய வாடை வீசும் தென்காசிச் சங்கமத்திற்கு, வள்ளுவர் குரல் குடும்ப நிறுவுநர் திருமிகு சின்னசாமி இராஜேந்திரன் அவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்று, இரண்டுநாள் தங்கி, திருக்குறள் சான்றோர் பெருமக்களைக் கண்டு, அவர்தம் சொற்பொழிவைக் கேட்டு, ஓர் அமர்வில் ‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’ எனும் தலைப்பில் உரையாற்றி, விழாக் குழுவினர் அளித்த அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்த பசுமையான நினைவுகள் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.

Thursday, 13 April 2023

நீயே முளைப்பாய்

      கவிதா ஜவகர் என்னும் பெண்மணி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பட்டிமன்ற மேடைகளில் பாங்குறப் பேசி வருகின்றார். வெண்கல மணி விட்டு விட்டு ஒலிப்பது போன்று தன் கணீர்க்குரலில் பேசிக் கேட்போரை நொடிப்பொழுதில் தன்பால் ஈர்க்கும் வல்லமை படைத்தவராய் விளங்குகின்றார். அதேபோல் தனிச்சொற்பொழிவிலும் தனி முத்திரை பதிக்கின்றார்.

   இவர் எழுதிய கவிதை நூலை வெளியிடவும், அந்நூலைத் திறனாய்வு செய்யவும் என் நூலக நண்பர் சிவக்குமார் என்னை அழைத்தார். கரும்பு தின்னக் கசக்குமா? உடனே அப் பணியை ஏற்றுக் கொண்டேன். 



 

 பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன் இட்ட புனைபெயருடன் தன் பெயரையும் சேர்த்து ‘கரிசல்காரி கவிதா ஜவகர்’ என்னும் பெயரில் தன் முதல் கவிதை நூலைப் படைத்துள்ளார். ‘கரிசல்காரி கவிதா ஜவகரின் முதல் நூல்’ என அவர் குறிப்பிட்டாலும் அப்படி  எண்ணத் தோன்றவில்லை! சொல்லவரும் செய்திகளைச் சொல்லும் விதத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. 

இது மழையில் நனைந்த நூல் என்று சொல்லும் அளவுக்கு பல கவிதைகளில் மழை பொழிகின்றது. ஓரிரு எடுத்துக்காட்டுகள்:

 

 மழைகடவுளின் தழுவல்

 தேவதையின் முத்தம்

 அம்மாவின் அதட்டல்

 குழந்தையின் கருணை

 

மழை - பணக்காரர் வீட்டுத் தாழ்வாரத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும்

மத்திய வர்க்கத்தில் தங்கம்போல் சேமிக்கப்படும்

சேரியின் வீடுகளில் பிள்ளையெனச் செல்லம் கொஞ்சும்.

 

இவர் கவிதைகளில் கிண்டல் இருக்கிறது; கேலியும் இருக்கிறது. பின்வரும் கவிதையைப் படித்ததும் என்னை அறியாமல் உரக்கச் சிரித்தேன்.

 

  கோவிலுக்குள் நுழைந்தார் மந்திரி

  வெளிநடப்புச் செய்தார் கடவுள்!

 

 சங்க இலக்கியம் கற்ற புலவர்களில்

 பலர் அகம் பேசுவதை விடப்

 புறம் பேசுகிறார்கள்.

 

மனிதன் நாயினும் கீழானவன் எனக் கிண்டலடிக்கும் கவிதை இது:

 

நாய்கள் மனிதனைப் போலில்லை 

அவற்றிற்கு உள்ளொன்று வைத்துப்

புறமொன்று குரைக்கத் தெரியாது;

வாலாட்டி வாழுமேயன்றி

யாருக்கும் வால்பிடித்து வாழாது;

நாய் மனிதனின் தோழன்

ஆனால் மனிதன் யாருக்கும் தோழனில்லை.

 

மனித வாழ்க்கை முரண்பாடுகளுடன் பின்னிப் பிணைந்தது. இது குறித்த இந்தக் கவிதை என்னை வெகுவாய் ஈர்தத்து.

 

பள்ளியில் விட்டபோதும்

கல்லூரியில் சேர்த்தபோதும்

வேலை நிமித்தம் வெளிநாடு அனுப்பிய போதும்

திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே போன அம்மாவிற்குக்

கொள்ளிவைக்கும் தருணத்தில் வெட்டியார் சொன்னார்:

திரும்பிப் பார்க்காம போ என்று.

 

நீயே முளைப்பாய் எனும்  கவிதைத் தலைப்பே நூலுக்கும் தலைப்பாக அமைந்துள்ளது. சோகத்தின் உச்சம் தொட்ட கவிதை இது. ஈழப்போராளி பிரபாகரனின் குழந்தையைச் சிங்களர் சுட்டுக் கொன்றதை மூன்று பக்கக் கவிதையாய் வடித்துள்ளார். கண்ணீரை வரவழைக்கும் கவிதை!

 

 

மாறுபட்ட கோணத்தில் ஒரு காதல் கவிதையைக் கண்ணுற்றேன். அது இது:

 

கதவைத் தட்டினேன் நான் 

ஜன்னலைத் திறந்தாய் நீ.

 

கொஞ்சம் அரசியல் வாடையும் வீசுகிறது. பதச் சோறாக ஒன்று.

 

 தண்ணீர் வராத குழாயடியிலும்

 காத்திருக்கும் காலிக்குடங்களைப்போல

 வாக்குச் சாவடியில் வரிசையாய் மக்கள்.

 

நூலைப் படித்து முடித்தவுடன் எடுத்துச் செல்ல வேண்டிய செய்தியாக நான் பார்த்த நல்ல கவிதை இது:

 

 தன்னை வெளிக்காட்டும் அறிவைவிட

 பிறருக்காய் வெளிப்படும் அன்பு புனிதமானது.

 

சமுதாயத்தைக் கூர்ந்து காணும் திறமையும், அவ்வாறு காண்பதைக் கவிதையாக்கும் கைவண்ணமும் வாய்க்கப்பெற்ற கவிதா ஜவகர் இன்னும் பல கவிதை நூல்களைப் படைக்க வேண்டும் என விழைகிறேன்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ

தேசிய விருதாளர்.

 

நூல் குறித்த விவரம்: நீயே முளைப்பாய்/ 108 பக்கம்/ 100 ரூபாய்/ படைப்பு பதிப்பகம்- 94893 75575