திருக்குறளை வாழ்வியலாக்க வேண்டும் என்னும் முனைப்போடு செயல்பட்டு வருபவர் வள்ளுவர் கல்லூரியின் நிறுவுநர் திரு.க.செங்குட்டுவன் அவர்கள்.
சனிக்கிழமை தோறும் காலையில் ஒரு மணிநேரம் குறள் வகுப்பு நடத்தி, வகுப்பில் பங்கேற்கும்
குழந்தைகள் பெற்றோர் அனைவருக்கும் சுவையான காலை உணவு வழங்குவது என்னும் சிறப்பானத்
திட்டத்தை வடிவமைத்துள்ளார்.
தொடக்க வகுப்பு இன்று(25.4.26) காலை 7.30 மணிக்கு, வள்ளுவர் ஹோட்டல் வாசுகி
அரங்கில் நடைபெற்றது. பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்கள் முப்பத்து மூன்று பேரும்,
பெற்றோர் நாற்பது பேரும் பங்கேற்றனர்.
திருக்குறள் ஏன் வாழ்வியலாக மாற வேண்டும் என்பதைத் திரு.க.செங்குட்டுவன் அவர்கள்
தம் நோக்கவுரையில் தெளிவாக எடுத்துரைத்தார். நாற்றங்கால் பழுது படாமல் பார்த்துக் கொள்ளும்
முயற்சியே இது என நான் என் தொடக்கவுரையில் குறிப்பிட்டேன். தொடர்ந்து மருத்துவர் ப.இரமேஷ்
அவர்கள்,
கேடில் விழுச்செலவம் கல்வி ஒருவற்கு
மாடு;அல்ல மற்றை யவை
என்னும் குறளுக்கு அருமையான விளக்கவுரை தந்தார்.
ஓர் எழுநிலை கோபுரத்தைக் கட்டி எழுப்பி, கலசத்தை அமைப்பதைப் போல இக் குறளுக்குத் தொடர்புடைய
பலவேறு செய்திகளை நிரல்பட எடுத்துக்கூறி, நிறைவில் இக் குறளை முத்தாய்ப்பாக உரைத்த
பாங்கு போற்றத் தக்கது.
ஓர் எளிய ஓட்டு வீட்டில் வாழ்ந்த இவரது
பெற்றோர் நல்ல வீடு கட்ட கனவு கண்டனர். அக் கனவு நனவாவதற்கு இவர் கற்ற கல்வி எப்படி
உதவியது என்பதை விளக்கிச் சொன்னபோது, அதைக்கேட்ட மாணாக்கச் செல்வங்கள் அதை எடுத்துச்
செல்லும் செய்தியாக(Home taking message) மனத்தில் வாங்கிக் கொண்டதை அவர்களின் முகக்குறிப்பில்
காண முடிந்தது.
மரு.ப.இரமேஷ்
வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தாமே முன்வந்து நல்ல பின்னூட்டம் அளித்தனர்.
செவியுணவைத் தொடர்ந்து வயிற்றுக்கும் உணவு தயாராக இருந்தது. பாக்குத் தட்டுகளில்
பரிமாறப்பட்ட காலை உணவு வயிறார உண்ணும் வகையில் மிகவும் சுவையாக இருந்தது.
நல்ல தொடக்கம். தொடர்ந்து தொய்வின்றி நடைபெற வேண்டும்.
காலையில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட வள்ளுவர்
குரல் குடும்பம் திரு.சி.இராஜேந்திரன் அவர்கள் கரூரில் தொடங்கும் இந்தச் சிறு முயற்சி
மாநிலம் தழுவிய ஓர் இயக்கமாக உருவாக வேண்டும் என வாழ்த்தினார்.
அவருடைய வாக்குப் பலிக்கும்.
முனைவர் அ.கோவிந்தராஜூ,
மனநல ஆலோசகர், கரூர்.
ஆற்ற வேண்டிய பணி .. தந்நலமற்று செயல்படும் போது நல்ல விளைவைத் தரும்
ReplyDeleteஇந்த முயற்சியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் அன்பும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் .
திருக்குறள்: 1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
மு.வரததாசனார் உரை:
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
சி இரா வள்ளுவர் குரல் குடும்பம்
www.voiceofvalluvar.org