Sunday 18 June 2017

கோடையைக் கொண்டாடும் நாடு

   ஒட்டு மொத்த கனடா நாடும் ஆண்டுதோறும் எதிர்பார்த்துக் காத்திருப்பது இந்த இரண்டு மாத கோடைக்காலத்தை என்றால் அது மிகையாகாது.
 
பத்துமாதங்கள் கடுங்குளிரிலும் பனிப்பொழிவிலும் அவதியுற்ற மக்களுக்கு ஜூன் ஜூலை இரண்டு மாதங்களும் கொண்டாட்டம்தான். மக்களுக்கு மட்டுமல்ல; மரம் செடி கொடிகளுக்கும்கூட கொண்டாட்டம்தான். எங்கு நோக்கினும் பூத்துக் குலுங்கும் செடிகள், மரங்கள், பச்சைப் போர்வையென பரந்து விரிந்து கிடக்கும் புல்வெளிகள். இவற்றைக் கண்டு மகிழ கண்கோடி வேண்டும். இப் பருவத்தை வசந்தகாலம்(Spring season) என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

    பத்துமாதங்கள் விண்வெளி வீரர்கள் போல உடைமேல் உடையணிந்தவர்கள் இப்போது கதிரவனுக்குத் தம் மேனி அழகைக் காட்டி உற்சாகமாய் உலா வருகிறார்கள்.

  காலை நான்கு மணிக்கே விடியத் தொடங்குகிறது. கதிரவனின் ஆதிக்கம் இரவு ஒன்பது மணிவரை நீடிக்கிறது. மாலையில் ஐந்து மணி ஆகிவிட்டதே என எண்ணி நடைப்பயிற்சிக்குச் சென்றால் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இப்போதெல்லாம் மாலை எட்டு மணி வாக்கில்தான் நடப்பதை வழக்கமாக்கியுள்ளேன்.

    ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதியில் நடக்கிறேன். என் கையின் ஆறாவது விரலாகத் திகழும் கேமிராவில் கண்டதை எல்லாம் படம் பிடித்துத் தள்ளுவேன். குழந்தை குட்டிகள், காக்கை குருவிகள், நாய் நத்தைகள், மரம் மட்டைகள், மொட்டு மலர்கள் என அனைத்தையும் படம்பிடித்து இரவு நேரத்தில் அவற்றை எனது மடிக்கணினியில் இறக்குமதி செய்து  வகைப்படுத்தி வைத்துவிடுவேன். வேண்டும்போது நான் எழுதும் வலைப்பூ கட்டுரைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வேன்.

    மேலும் நடைப்பயிற்சியின்போது சந்திக்கும் மனிதர்களிடம் தயக்கமின்றிப் பேசுவேன். குப்பை அள்ளும் குஜூ, மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றும் தமாரா, புல் செதுக்கும் புஷ் என எல்லாரிடமும் பேச்சுக் கொடுப்பேன்; அவர்கள் செய்யும் பணியை வியந்து பாராட்டுவேன். அனுமதியுடன் அவர்களைப் படம் பிடிப்பேன்.

    இப்படித்தான் நேற்று முன்தினம் மாலை ஏழு மணிக்கு நடக்கத் தொடங்கி ஒன்பது மணிக்கு இல்லம் திரும்பினேன். மனைவியும் மகளும் தேடாத குறைதான். அலைப்பேசியையும் எடுத்துச்செல்லவில்லை.

    
குடியிருப்பிலிருந்து நடந்து, பெருஞ்சாலையைக் கடந்து ஏதோ ஒரு  குறுஞ்சாலையில் சென்றால் ஒரு பெரிய ஏரிக்கரையில் கொண்டு சென்று விட்டுவிட்டது. கடல் போன்ற ஏரி. அந்த ஏரிக்கரை நெடுக பத்தடி  அகல தார்ச்சாலை கிலோமீட்டர் கணக்கில் வளைந்து நெளிந்து செல்கிறது. சாலையின் இருபுறமும் அடர்ந்த உயர்ந்த மரங்கள்; வண்டினங்கள்  முரல்வது செவியில் விழுந்த வண்ணம் இருந்தன. அச் சாலையில் நடந்து செல்லலாம் அல்லது மிதிவண்டியில் செல்லலாம். வளர்ப்பு நாயைக் கையில் பிடித்தபடி நடக்கலாம். ஆனால் அது ஆய்போக  நேர்ந்தால் முறையாக எடுத்து உரிய இடத்தில் போடவேண்டும். கண்டுகொள்ளாமல் சென்றால் நூறு டாலர் (ரூபாய் ஐயாயிரம்) தண்டத்தொகை கட்டவேண்டும்.

   அந்த ஏரிச் சாலையில் கார் போன்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் நடந்திருப்பேன். மக்களின் பெருங்கூச்சல் காதில் விழுந்தது. நடையை எட்டிப் போட்டேன். சற்று தூரம் நடந்ததும் பெரிய நீர்ப்பரப்பும் கரையும் தெரிந்தன. இந்த இடத்தை பிரிட்டானியா பீச்(Britannia Beach) என்று சொகிறார்கள்.

   
சுருக்கென்று இருக்கும் மாலை வெயிலில் மக்கள் திரண்டிருந்தார்கள். சிலர் நடந்தனர்; சிலர் மெல்ல ஓடினர்; மற்றும் சிலர் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு சென்றனர். ஆண்களும் பெண்களும் சேர்ந்து மணல் பரப்பில் கைப்பந்து விளையாடினர். குழந்தைகள் சின்னச் சின்ன மிதிவண்டிகளை ஓட்டி மகிழ்ந்தனர். விளையாடிக் களைத்தவர் அங்குள்ள உணவகத்தில் அமர்ந்து ஒரு பெரிய மூடப்பட்ட பிளாஸ்டிக் குவளையின் மேல்பகுதியில் இருந்த சிறு துளை வழியே சுவையான காஃபியை சூடாக அருந்திக் கொண்டிருந்தனர்.

    அங்கே இருந்தவர்களில் பாதிப்பேர்கள் மகளிராகத் தெரிந்தனர். அவர்களுடைய ஆடைக் குறைப்பு நடவடிக்கைதான் எனக்குச் சற்றே நெருடலாக இருந்தது.. அது அவர்களுடைய கலாச்சாரம். கலாச்சாரம் என்பதை விட சுதந்திரம் எனச் சொல்லலாம். உண்பதிலும் உடுப்பதிலும் குடிப்பதிலும் யாரும் யாரையும் தட்டிக் கேட்க முடியாது; கருத்தைத் திணிக்க முடியாது. அந்த  அளவுக்குத் தனி மனித சுதந்திரம் இங்கே நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ஆனால் அடுத்தவரை எந்த வகையிலும் பாதிக்காத சுதந்திரம். கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரம்; கட்டவிழ்த்து விடப்பட்ட சுதந்திரம் அன்று.

  பெண்களுக்குச் சுதந்திரமும் உரிமையும் மிகுதியாக உள்ள நாடாகத் தெரிகிறது. கனடா நாட்டின் அமைச்சர் குழுவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரீடோ உட்பட முப்பது பேர்கள் உள்ளனர். அவர்களில் பதினைந்து அமைச்சர்கள் அதாவது ஐம்பது விழுக்காட்டினர் பெண்கள்! அர்த்தநாரீஸ்வரன் எனப்படும் மாதொருபாகனை வணங்கும் நம் நாட்டில் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு முப்பத்து மூன்று விழுக்காடு உரிமை நல்கும் சட்டத்தை நம்மால் கொண்டுவர முடியவில்லை. படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்!

  
ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கவனித்தேன். நான் பார்த்த இருபது பேருந்துகளில் பன்னிரண்டு பேருந்துகளில் பெண்களே ஓட்டுநர்களாக இருந்தார்கள். ஒன்றன் பின்னால் ஒன்றாக நடைதளத்துடன்(Vestibule) கூடிய  இரு பேருந்துகளைக் கொண்ட நடத்துநர் இல்லாத தொடர் பேருந்து; நம் நாட்டில் ஆண்களே ஓட்டத் தயங்கும் இவ்வகைப் பேருந்துகளை இங்கே பெண்கள் அவ்வளவு அருமையாக புன்னகை மாறாமல் ஓட்டுகிறார்கள். கூடுதல் தகவல் ஒன்று- பள்ளிப் பேருந்துகளின் ஓட்டுநர்களில் எழுபத்தைந்து விழுக்காட்டினர் பெண்களே!

   அரசே பன்முகக் கலாச்சாரத்தை(Diversified culture) அங்கீகரிக்கிறது. ஆதரிக்கிறது. அமெரிக்காவில் சில இடங்களில் இலைமறை காயாக நிறவேறுபாடு நிலவும். ஆனால் இங்கு அதுவும் இல்லை. சாதி, மதம், இனம், மொழி, நாடு என எந்த வேறுபாடும் இல்லை எனலாம். அல்லது உலக நாடுகளை ஒப்பிடும்போது மிகக் குறைவாக உள்ளது எனக் கூறலாம். இந்த ஒரு காரணத்துக்காகவே இந்தியர்கள் இங்கே படிப்பதற்கும் பணி செய்வதற்கும் பெரிய எண்ணிக்கையில் வருகிறார்கள்..

    ‘யாவரையும் மதித்து வாழ்” என்று புதிய ஆத்திசூடியில் பாரதி கூறுவான். அதை யார் மொழிபெயர்த்துச் சொன்னார்களோ தெரியவில்லை. கனடா நாட்டுக்காரர்கள் அதைச் சரியாகப் பின்பற்றுவதால்தான் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறார்கள்..

    மனிதகுலம் பின்பற்ற வேண்டிய எல்லா  நல்ல கருத்துகளையும் உலகுக்கு உரைத்தவர்கள் இந்தியராகிய, தமிழராகிய நாம்தாம். அவற்றை நாம் பின்பற்றுவது எந்நாளோ?.

முனைவர் .கோவிந்தராஜூ
முகாம்: கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவா


5 comments:

 1. சாதி, மதம், இனம், மொழி, நாடு என எந்த வேறுபாடும் இல்லை

  ஆகா, போற்றுதலுக்கு உரிய நாடு ஐயா

  ReplyDelete
 2. உங்கள் மூலமாக கனடாவைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையினைப் பெற்றோம். பல்முகக்கலாச்சாரத்தைப் பேணும் அந்நாட்டைப் பற்றி அறிய வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 3. I am sure nature would have refreshed you.

  ReplyDelete
 4. "வண்டினங்கள் முரல்வது செவியில் விழுந்த வண்ணம் இருந்தன" - முரல்வது புதிய சொல்லாக இருக்கிறது.
  கல்லாத கடலளவில் கையளவு கற்கிறேன் புதிதாக..... தங்கள் பதிவினால். நன்றி அண்ணா...!

  ReplyDelete