Sunday 25 June 2017

ஒரு தேசியக்கொடியின் கதை

    தன் தாயையும் தாய் நாட்டின் கொடியையும் மதிக்காத ஒருவன் இருந்தாலும் இறந்தாலும் ஒரு பயனும் இல்லை. "தாயின் மணிக்கொடி  பாரீர் அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்" என்னும் பாரதியின் பாட்டைப் படித்தால் மட்டும் போதுமா?

    கனடா நாட்டுக் குடிமக்கள் தம் தேசியக் கொடியைப் போற்றி மதிக்கிறார்கள்; துதிக்கிறார்கள். காணும் திசையெல்லாம் கொடி பறக்கின்றன. மற்றபடி கட்சிக் கொடிகள் பறப்பதை எங்கும் காண முடியாது.
    
கனடா 150
இவர்கள் சுதந்திரம் பெற்று நூற்று ஐம்பது ஆண்டுகள் ஆனதை கனடா 150 என்ற முழக்கத்தோடு கொண்டாடுகிறார்கள். இது குறித்துத் தனிக் கட்டுரையை பின்னர் எழுதுவேன்.
     “எங்கள் நாட்டுக் கொடி இளமையான கொடி” என்று கூறினார் ஒரு கனடா குடிமகன். நான் எதுவும் புரியாமல் விழித்ததைக்கண்டு சிரித்தபடிக் கூறினார்: “எங்கள் நாடு சுதந்திரம் பெற்று நூற்று ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன என்றாலும்  எங்கள்  தேசியக்கொடி முதன் முதலில் பறந்தது என்னவோ 1965இல் தான்”
   
கனடா நாட்டின்  தேசியக்கொடி
வாருங்கள் கனடா நாட்டின் தேசியக்கொடியைச் சற்று அருகில் நின்று பார்ப்போம். கொடியின் நடுவில் வெண்ணிறம்.  இரு பக்கமும் அடர் செந்நிறம். அந்த வெண்ணிறப் பின்புலத்தில் பதினோரு முனைகளைக் கொண்ட ஒரு மேப்பிள்   இலை விரித்து வைக்கப்பட்ட நிலையில் உள்ளது. தேசிய மரமாகக் கருதப்படுவதும் நாடு முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பதுமான மேப்பிள் மரத்து இலைதான் அது.

   இந்தக் கொடிக்கென ஒரு தனி வரலாறும் உண்டு. இவர்கள் பெற்றுள்ள சுதந்திரம் நாம் பெற்றதுபோல் பூரண சுதந்திரம் அன்று. “நீங்கள் விரும்பியதைச் செய்யலாம். ஆனால் கடைசியில் எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செய்யுங்கள்” என்ற நிபந்தனையுடன் சுதந்திரம் கொடுத்தார்கள். இன்றும் குடியாட்சியுடன் கூடிய முடியாட்சிதான் நடக்கிறது. பாராளுமன்றத்தில் எந்தச் சட்டத்தை நிறைவேற்றினாலும் கடைசியில் இங்கிலாந்து பேரரசிதான் ஒப்புதல்தர வேண்டும்.

    இப்படிப்பட்ட இரண்டுங்கெட்ட சுதந்திரம் பெற்றதால் தொடர்ந்து யூனியன் ஜாக் எனப்படும் பிரிட்டிஷார் கொடியே கனடாவில் பறந்தது. தமக்கென ஒரு தனிக்கொடி வேண்டும் என்று 1925 வாக்கில் அன்றைய பிரதமர் வில்லியம் லியான் முன் மொழிந்தாலும் ஆங்கில ஆட்சியின் விசுவாசிகள் பலரும் அதை வழிமொழியவில்லை. இந்த விவகாரம் 1944 வரை கிணற்றில் போட்ட கல்லாகக் கிடந்தது.

    1945இல் அமைக்கப்பட்ட பாராளுமன்ற கொடிக் குழுவும் 1962 வரை தூங்கி வழிந்தது. “என்னைத் தேர்ந்தெடுத்தால் தனிக் கொடி உருவாக்கித் தருவேன்” என்ற தேர்தல் வாக்குறுதியுடன் களத்தில் குதித்த லெஸ்டர் பியர்சன் 1963இல் புதிய பிரதமரானார். பொதுமக்களிடமிருந்து கொடிக்கான வடிவமைப்பைக் கோரினார். ஆயிரக் கணக்கில் வந்து குவிந்தன.

    பாராளுமன்றத்தில் இரண்டாண்டுகள் விவாதங்கள் நடந்தன. சிலர் கொடியின் நடுவில் பீவர் எனப்படும் சிறு முயல் போன்றதொரு விலங்கு இடம்பெற வேண்டும் என்றார்கள். வேறு சிலர் சிங்கம் இடம்பெற வேண்டும் என விரும்பினர். இன்னும் சிலர் நட்சத்திரங்கள் இருந்தாலே போதும் என்றனர். ஆனால் நீண்ட நெடிய விவாதத்திற்குப் பிறகு ஓட்டெடுப்பு எதுவும் இல்லாமல் ஒருமனதாக இப்போதுள்ள கொடி வடிவமைப்பை ஏற்றுக் கொண்டார்கள். 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒட்டாவா பாராளுமன்றக் கட்டடத்தில் முதன் முதலில் கனடா நாட்டின் தேசியக்கொடி பறந்தது.

    கனடாவாழ் குடிமக்கள் தங்கள் வீட்டின் முன் தேசியக் கொடியை நாளும் பறக்கவிடுவதைக் கண்டு வியப்படைந்தேன். பொது மக்கள் தங்கள் கார்களில் தேசியக்கொடி பறந்தவண்ணம் வலம் வருகிறார்கள். அணியும் உடையில், தலைக்குப் போடும் தொப்பியில்  தேசியக் கொடியின் சாயல் பளிச்சிடுகிறது.
   
செடியிலே கொடி
நம் ஊரில் செடிகொடி உண்டு. இங்குதான் செடி கொடியாக இருப்பதைப் பார்த்தேன்! கொடியின் வடிவமைப்பில் பாத்தியமைத்து, வண்ணப்பூக்கள் பூக்கும் செடிகளைத் தேர்ந்தெடுத்து நெருக்கி நடவு செய்து காண்பவரின் கண்ணைக் கவரும் வகையில் செடிகளாலான கொடியை உருவாக்கியுள்ளனர்.

   சுதந்திர தினத்தன்று நாடாளுமன்றத்தில் மட்டுமன்று நாடு முழுவதிலும் உள்ள குடிமக்கள் இல்லங்களிலும் கொடியேற்றப்படுகின்றன. இந்த நல்ல பண்பை இவர்களிடமிருந்து நாமும் கற்றுக் கொள்ளலாமே.
    
எங்கள் வீட்டில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி
நான் பல ஆண்டுகளாக எங்கள் இல்லத்தில் சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் கொடியேற்றி வருகிறேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை.

  விமானம் ஏறுமுன் என்னுடைய துணிமணிப் பெட்டியில் முதலில் எடுத்து வைத்தது நம் தேசியக் கொடியைத்தான். வருகிற ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் இங்கே ஒட்டாவா நகரில் உள்ள எங்கள் இல்லத்தில் நம் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கும்.
என் வழி தனி வழி..
முனைவர் .கோவிந்தராஜூ

கனடாவிலிருந்து

9 comments:

  1. ஐயா ஒரு நாட்டின் கொடிக்கு இவ்வளவு போராட்டம் நடந்ததென்பது உங்கள் கட்டுரை மூலமே அறிகிறேன். இந்திய விடுதலை மற்றும் அதற்கு பாடுபட்டவர் பற்றி தெரிந்து கொள்ள 2014ம் ஆண்டு வரை எனக்கு பெரிய அளவில் ஆர்வமில்லை. ஆனால் அந்தமான் சிறைச்சாலையில் ஒரு பொழுது கழிந்த பின்னர் தான் நம் முன்னோர்கள் பட்ட இன்னல்கள் கட்டுக்கடங்காதவை என்று தெரிந்தது. அது போலவே தான் நம் நாட்டின் கொடியின் மதிப்பு இன்று புரிகிறது. நன்றி ஐயா. நானும் இந்திய விடுதலை நாளில் எனது வீட்டில் நம்நாட்டுக் கொடி ஏற்றுவேன்

    ReplyDelete
  2. We have lots of Ego problem.We still think money is big not Nation.Our schools teach no moral education.From young to old our people have little moral behavior.How many of us know to sing our National Anthem including school children?

    ReplyDelete
  3. கனடா நாட்டு தேசியக்கொடி பற்றிய பதிவு அருமை
    இந்தியா 1947 ஆகஸ்ட் 15 விடுதலை பெறும் வரை
    ஜனவரி 26 ம் தேதியைத்தான்
    விடுதலை தினமாக கொண்டாட
    வேண்டுமென 1930ம் ஆண்டு நேரு அவர்களால் அறிவிக்கப்பட்டது
    அன்றைய தினம் மூவர்ணக்கொடியை ஒவ்வொரு இல்லத்திலும் பறக்கவிட வேண்டும் என்றும் பணித்திருந்தார்
    நமது சென்னையில் வசித்த
    ஆர்யா என்கிற பாஷ்யத்திற்கு
    இந்த கொடியினை ஏன் செயின்ட்
    ஜார்ஜ் கோட்டையில் ஏற்றக்கூடாது என்று தோன்றிற்று
    தற்போதைய தலைமைச்செயலகம் தான் அந்த கோட்டை
    மூன்று தளங்களுடன் உள்ள மொட்டைமாடியில் 200அடி உயரத்தில் பறக்க மிகப்பெரிய
    கொடியினை மூன்று சேலைகளை
    இணைத்து தயார் செய்து அவர் ஓவியர் என்பதால் நடுவில் அன்றைய கொடி லட்சினையை
    வரைந்து தன்னுடைய உடலில்
    சுற்றிக்கொண்டார்
    மேலே ஆங்கிலேய சிப்பாய்க்கான
    சீருடை அணிந்து கொண்டார்
    இரவு இரண்டாம் காட்சி திரைப்படம் காணவந்த சிப்பாய்களோடு சேர்ந்து கோட்டைக்குள் நுழைந்துவிட்டார்
    மூன்றுமாடிகள் ஏறி கொடிமரத்திலும் ஏறி தன்னுடைய உடலில் சுற்றியிருந்த தேசியக்கொடியை ஏற்றினார்
    ஏறும்போது கலங்கரைவிளக்கம் தந்த ஒளி அவர்மீது பட்டது
    நல்லவேளை ஆங்கிலேயர் கண்களில் அது படவில்லை
    1931 ஜனவரி 26 காலை திருவல்லிக்கேணிவாசிகளுக்கு
    ஒரே கொண்டாட்டம் நம்தேசக்கொடி கோட்டையில்
    பறப்பதைப்பார்த்து
    ஆங்கிலேயர்க்கு மாபெரும் அதிர்ச்சி
    இப்படி
    தியாகிகள் உடலே கொடிமரமாக
    நரம்புகளெல்லாம் மணிக்கயிறாக
    பட்டொளிவீசிப்பறந்தது நம் தேசக்கொடி அன்று

    ReplyDelete
  4. உங்களது முந்தைய பதிவுகளை பாராட்டியவர்கள் உங்கள் எழுத்தையும் வர்ணனையையும் மொழி வீச்சையும் நிழற்படங்களையும் பாராட்டி இருந்தனர். தேசியக்கொடி பற்றிய இந்தப் பதிவு வாசகர்களின் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்பாய் உறங்கிக் கொண்டிருந்த தேசப்பற்றினை தட்டி எழுப்பி விட்டது.
    Mera Bharat Mahaan... வந்தேமாதரம்....!

    ReplyDelete
  5. உங்கள் வழி சிறப்பான வழி... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  6. அறியாத செய்திகளை அறிந்து கொண்டேன் ஐயா
    கனடா நாட்டில், நம்சுதந்திர தினத்தன்று, நம்நாட்டின் கொடியினை ஏற்றப்போகிறீர்கள்
    மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா
    தாங்கள் போற்றுதலுக்கு உரியவர்

    ReplyDelete
  7. கனடா நாட்டின் தேசப்பற்றையும், தேசியக்கொடியின் சிறப்பையும் அழகாகப்பதிவிட்டு அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நம் நாட்டிலும் மேற்காண் சிறப்பும் உண்டு. என்ன பற்றில்லாதவர்கள் கையில் நாடு, கொடி என்ன செய்யும். செடியில் அந்நாட்டின் கொடி அருமை. ஹிட்லர் தான் அரசாட்சி செய்த காலத்தில் தனது
    நாஜிக் கட்சியின் சின்னமான ஸ்வஸ்திக் முத்திரையை வானத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் பசுமையான இலைகளையுடைய மரங்களுக்கு நடுவில் இளம் சிவப்புத்தளிர்களையுடைய மரங்களை நட்டு ஸ்வஸ்திக் முத்திரையைக் காணும்படி செய்தார். தேசியக்கொடியினை விரும்புவர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும். நம் நாட்டுப் பள்ளிகளில் குடியரசு மற்றும் சுதந்திரத்திருநாளில் வண்ணங்களை அறியாமல் தலை கீழாகப் பறக்க விடுபவர்கள் உண்டு. அதிலும் ஆகஸ்டு மாதம் 14ஆம் நாள் பாகிஸ்தான் சுதந்திர தினம் ஆகும். விடுமுறையை அனுபவிக்க வேண்டும் என சில ஆசிரியர்கள் ஆகஸ்டு 15க்குப் பதிலாக 14ஆம் தேதி அன்றே நம் நாட்டுப் பள்ளிகள் சிலவற்றில் கொடியேற்றினார்கள் என செய்தித்தாளில் படித்தேன். இத்தகையோரின் பற்றை என்னவென்பது. எனது மகன் ஸ்ரீராம் தங்களைப் போன்று வீட்டில் தேசியக்கொடியினை ஏற்றி வீரவணக்கம் செலுத்துவான் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். நம் நாட்டுப்பற்றை அறிந்தவர்கள் போற்றட்டும், அறியாதவர்கள் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. நம் நாட்டில் குடியரசு மற்றும் சுதந்திரத் திருநாளை நம் நாட்டுப்பள்ளிகளில் தேசிய விழாவாகக் கொண்டாடுவதுடன் அன்றைய தினத்தில் இத்தகு நிலையை அடைய உழைத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படவேண்டும். பொது விடுமுறையாக அறிவிப்பதைத் தவிர்த்து அந்நாள் பணி நாளாகக் கொண்டாட்ட நாளாக அறிவிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். தங்களிடம் ஒரு வினா? சமீபத்தில் பணி நிமித்தமாக சண்டிகர் செல்ல பெங்களூரு விமான நிலையம் சென்றேன். விமானநிலையத்தில் பகல் 1.00 மணிக்குத் தேசியக்கொடி பறந்த நிலையில் கண்டேன். சில தினங்கள் கழித்து மீண்டும் அதே மார்க்கத்தில் பணி முடித்து இரவு 8.00 மணிக்கு வந்திறங்கினேன். இரவு 8.00 மணிக்கும் தேசியக்கொடி பறந்தது. 26.6.2017 அன்று சென்னை விமானநிலையதிலும் இரவு 7.00 மணிக்கு தேசியக்கொடி பறந்தது. மாலை 6.00 மணிக்குத் தேசியக்கொடியை இறக்க வேண்டும் என்பது தானே விதி. இதற்குத் தாங்கள் விடை தர வேண்டும்.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்

    ReplyDelete
  8. விமானநிலையஙகளில் 24 மணி நேரமும் தேசியக் கொடி பறக்க அனுமதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  9. ஆஹா! அருமையான பயனுள்ள தகவல்கள்.
    உங்கள் வழியே எங்கள் வழி!

    ReplyDelete