Friday 23 June 2017

கைவண்ணம் இங்கு கண்டேன்

  நாங்கள் கனடா நாட்டுக்கு வந்து இறங்கியதும் நான் என் வலைப்பூ பக்கத்தில் வெளியிட்ட ஒரு கட்டுரைக்கு  வலைப்பூவர் இட்ட பின்னூட்டத்தில், “அழகிய ஏரிகள் நிறைந்த எழில்மிகு நாட்டுக்கு வந்திருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

   அவர் சொன்னது உண்மை என்பதை வந்து பத்து நாள்களுக்குள் பார்த்து அறிந்து கொண்டேன். நம்முடைய நாடு அதிலும் குறிப்பாக தமிழ்நாடு ஒருகாலத்தில் ஏரிகள் நிறைந்த நாடாகத்தான் இருந்தது. இராஜேந்திர சோழன் வெட்டிய பொன்னேரி எங்கள் ஊரான ஜெயங்கொண்டத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் வரைக்கும் பரந்து விரிந்து கிடந்தது அந்தக்காலம். அது காலப்போக்கில் விளை நிலங்களாக மாறி, பிறகு ரியல் எஸ்டேட்காரர்களின் விழை நிலங்களாக ஆகி, பின்னர் விலை நிலங்களாகி, கூறுபோட்ட மனைகளாகிப் போனது. தமிழ்நாடு முவதும் இதே கதைதான். ஏரி குளமாகி, குளம் குட்டையாகி, குட்டை சொட்டையாகி, அந்தச் சொட்டையும் பட்டாவாகிப் போனதை எண்ணியபடி ஒட்டாவா ஏரிக்கரையில் நடந்து கொண்டிருக்கிறேன். நாடு விட்டு நாடு வந்தாலும் நம்நாட்டு பற்றிய கவலை இருக்கத்தானே செய்கிறது?

    சரி சரி வந்த இடத்தைப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் மூன்று கண்களாலும் (என் கேமிராதான் மூன்றாம் கண்) திசையெங்கும் நோக்கினேன். ‘நோக்க நோக்க களியாட்டம்” என்று பாரதி கூவியதைப் போலவே நானும் கூவி ஒரு குதியாட்டம் போட நினைத்தேன். ஆனால் உடன் வந்த மனைவிக்குப் பயந்துகொண்டு, பதினாறு வயதினிலே கமலஹாசன் மாதிரி நடந்தேன்.

    ஒட்டாவா ஆற்றுநீரை அங்காங்கே ஆயிரம் ஏக்கருக்குக் குறையாமல் அமைந்துள்ள பெரிய ஏரிகளில் தேக்கி, மிகத் தூய்மையாகப் பராமரிக்கிறார்கள். அப்படியே அள்ளிக் குடிக்கலாம். இங்கெல்லாம் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் மனிதர்கள் குளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.  அதனால்தான் என்னவோ வள்ளுவர் குறிப்பிடும் மணிநீர் இங்கே எங்கும் நிறைந்துள்ளது.

       Andrew Haydon Park என்பது ஏரிப் பூங்காவின் பெயர். இங்கே காரை நிறுத்தவோ சுற்றிப் பார்க்கவோ கட்டணம் ஏதுமில்லை. ஏரிக்கரை எங்கும் பசும் புல்வெளிகள். வாரம் ஒருமுறை புல்மேயும் இயந்திரங்கள் மேய்வதால் மெல்லிய மரகதக் கம்பளங்களைப் பூமிச் செல்விக்குப் போர்த்தியதுபோல் காணப்படுகிறது.

புல்வெளிகளின் இடையே உழைப்பாளர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள நடைப்பாதைகள், சிறு குளங்கள், அவற்றை இணைக்கும் மரப்பாலங்கள், நீரூற்றுகள், ஏரியை நோக்கியவாறு  அமைந்த எழிலார்ந்த இருக்கைகள் என எல்லாமே கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

    ஏரி,குளம், குட்டைகளில் பெரிய பெரிய வாத்துகள் நீந்திச் செல்லும் அழகே அழகு. ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக் கணக்கில். அவை சுற்றுலா பயணிகளைக் கண்டு அஞ்சுகின்றன என்று சொல்ல முடியாது; வேண்டுமானால் கொஞ்சுகின்றன எனச் சொல்லலாம். அருகில் சென்று படம் எடுக்க வசதியாக, நம்மையே பார்க்கின்றன.

     மாலை நேரத்தில் நகர மாந்தர் பலரும் தங்கள் காரில் இணைத்து இழுத்து வந்த படகை ஏரியில் செலுத்தி மகிழ்கிறார்கள். ஆணும் பெண்ணும் இணைந்து செலுத்தி இனிமையாகக் கொஞ்சிக்குலாவி, மாலைப் பொழுதை மகிழ்ச்சியாகக் கழிக்கிறார்கள். வாழும் கலையை அறிந்தவர் இவர்கள். ஆனால் நமக்கு ஆயிரம் இருந்தும் அளவற்ற கவலைகள்!

    சின்னஞ்சிறு குழந்தைகளுடன் வரும் இளம் இணையர், சிறுவர் விளையாட்டுப் பூங்காவில் விளையாடவிட்டு, வேடிக்கைப் பார்த்து மகிழ்வது நமக்கு வேடிக்கையாக இருக்கும்.

   மலைப் பாம்பு மாதிரி நீண்டு கிடக்கும் அகன்ற நடைப்பாதையில் ஓர் இளம்பெண்  காலில் சக்கரங்களைக்(Roller skates) கட்டிக்கொண்டு ஒய்யாரமாக என்னை நோக்கி வந்தாள். என் பார்வை அவள்மேல் சென்றது. “எக்ஸ்கியூஸ் மீ” என்றேன். நின்றாள்; “ஓக்கே” என்றாள். நான் அவள் தந்த சக்கரங்களை என் கால்களில் மாட்டிக்கொண்டு கைகளை பக்கவாட்டில் அசைத்தபடி விரைகின்றேன் “ஏன் தடுமார்றீங்க. நிதானமா நடங்க” என என் மனைவி  சொன்னபோதுதான் சுய நினைவுக்கு வந்தேன். திரும்பிப் பார்த்தால். அந்தச் சக்கரப்பெண் நெடுந்தூரத்தில் சென்றுகொண்டிருந்தாள்.

     மாலை மயங்கும் நேரத்தில் சூரியன் ஏரி நீரில் மறையும் காட்சியைக் காண்பதற்கென்றே மக்கள் வருகிறார்கள். பார்த்துக் கொண்டிருக்கும்போதே சூரியனின் கைவண்ணத்தில் ஏரி நீர் முழுவதும் உருக்கி ஓடவிட்ட தங்கப் பிழம்பாய் மாறுகிறது. வானமகள் வார்த்தெடுத்த அழகிய தங்கத் தாம்பாளமாய்த் திகழும் கதிரவன் கண நேரத்தில் மறைந்து விடுகிறான்.

     பசி வயிற்றைக் கிள்ளியது. கைக்கடியாரத்தைப் பார்த்தேன். மணி 9.30. காரில் ஏறி கடுகிச் சென்றோம் இல்லத்தை நோக்கி.
முனைவர் .கோவிந்தராஜூ

கனடா நாட்டிலிருந்து

13 comments:

 1. வண்ணப்படங்கள், உங்கள் கைவண்ணம் எங்கள் ஊரின் அழகை இன்னும் அதிகமாக நேசிக்க வைக்கின்றன, அய்யா.

  ReplyDelete
 2. உங்கள் வருணனை எங்கள் குடும்பத்தாரும் விரைவில் ஒட்டாவா நகரத்தை காண தூண்டுகிறது ஐயா.

  ReplyDelete
 3. கண்ணுக்கினிய படங்கள் ஐயா
  மகிழ்ந்தேன்

  ReplyDelete
 4. "காலையில் எழுந்தவுடன் வலைப்படிப்பு"...,
  ஆவலைத் தூண்டுகிறது.
  ஒட்டாவாஎங்களை கிட்டவா என அழைக்கிறது !!
  உங்களின் மூன்றாவது கண் சூப்பர் சார்.

  ReplyDelete
 5. ஐயா, நீங்கள் விவரிக்கும் இந்த அழகுக் காட்சி இனி இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் கிடைக்காமல் போய்விடும் என்பதை சூசகமாக குறிப்பிட்டுள்ளீர்கள். நாம் பணத்தால் எதையும் செய்துவிடலாம் என்ற திமிர் காரணமாக நம் இயற்கை வளங்களை அழிக்கிறோம். கனடா போன்ற நாட்டவர் இயற்கையை மதிப்பதால் அவற்றை பாதுகாக்கின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். இதுவரை குடிக்கும் நீரை விலைகொடுத்து வாங்கிய நான் நேற்று முதல் குளிக்கவும் நீரை விலை கொடுத்து வாங்குகிறேன்.இயற்கைதான் மனநிறைவு தரும் என்ற இக்கட்டுரை மிகவும் முக்கியமான ஒன்று.

  ReplyDelete
 6. ஏரிக்கரையின் மேலே

  முதலாளி திரைப்படத்தில் T M S
  அவர்கள் பாடிய ஏரிக்கரையின் மேலே என்ற பாடல் தலைமுறைகள் பல கடந்தும்
  அனைவரையும் தலையாட்ட வைத்துக்கொண்டிருக்கிறது
  ஏரி அத்துடன் இணைந்த மதகுகள் அதன் மூலம் நீர்ப்பாசனம்
  மாலை நேரங்களில் மதகின்மீது
  அமர்ந்து நண்பர்களோடு கதைப்பேசியது பாடல் பாடியது
  அனைத்தையும் நிணைவுகூறவைத்தது உங்கள் கட்டுரை
  சமீபத்தில் எங்கள் சொந்த ஊராகிய துறையூர் சென்றிருந்தபோது நாங்கள் ஆடி மகிழ்ந்த ஏரியை பார்க்க சென்று
  ஏமாந்து போனேன்
  வடிவேலு ஒரு திரைப்படத்தில்
  கிணறு காணாமல் போனதாக
  காவல்நிலையத்தில் புகார் கொடுப்பார்
  அதேப்போல எங்கள் ஊர் ஏரியை
  காணவில்லை
  கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பில்
  ஏரியின் நடுவில் இருந்த ஐயன் தெப்பகுளம் கூட மறைந்து போய் இருந்தது
  ஒட்டாவா ஏரிகளில் குளிப்பதற்கு
  அனுமதியில்லை என்று எழுதியிருந்தீர்கள்
  எங்கள் ஊர்மக்கள் அனைவருக்கும் குளிக்க இயற்கை
  அழைப்புக்களை தீர்த்து கொள்ள
  ஒரே ஒரு நீர் ஆதாரம்
  இது போக மதகுகள் மூலம் விவசாய தேவைகளுக்கும்
  ஏரிக்கும் எங்கள் ஊர் குடிநீர் குளத்திற்கும் ஒரு தரைவழி இணைப்பு இருக்கும்
  குளத்துக்கு நீர் சிங்கத்தின் வாயில் இருந்து வருவதுபோல ஒரு சிற்பம் இருக்கும்
  ஏரிநீர் குடிக்க சகியாது
  என்ன அற்புதம் நடக்குமோ
  தெரியாது
  குளத்துக்கு வந்த நீர் இளநீராக இனிக்கும்
  வேகாத பருப்பெல்லாம் பூப்பூவாய்
  வெந்துவிடும
  குளத்தின் கரை கற்களால் அமைக்கப்பட்டு அதை ஆலோடி
  என்று அழைப்போம்
  திருட்டு தம் அடிக்க கோலி பம்பரம் கிட்டிப்புல் விளையாட
  அது ஒரு உல்லாசபுரி
  ஏரியில் விடுமுறை நாட்களில்
  காலையில் குளிக்கச்சென்றால்
  கண்கள் சிவக்க வீடு திரும்ப மாலையாகி விடும்
  இந்த ஏரியில் நீர் நிரம்பி கடவாயில் வழியாக நீர் நிறைந்து
  சின்ன ஏரிக்கு பெரிய கால்வாய்
  வழியாக செல்லும்
  எங்கள் வீட்டு கொல்லைக்கதவை
  திறந்தால் அலிபாபாவும் நாற்பது
  திருடர்களும் படத்தில் காண்பது போல தண்ணீர் ஓடும் காட்சியைக்
  காணலாம்
  ஆனால் இன்று பார்த்தால்
  மார்புக்காம்புகள் வற்றிப்போன
  மலட்டுத்தாயாய் எங்கள் ஊர் ஏரி

  ReplyDelete
  Replies
  1. அந்த நாள் நீர்நிலைகளை நினைவு படுத்தினீர்கள். ஏரிகளும் குளங்களும் ஒருபுறம் காணாமல் போக... நிலத்தடி நீரை துரத்திக்கொண்டு 1000 அடிகளை தாண்டி ஆழ்குழாய் கிணறுகளை அமைக்க... இப்படி உலகிற்கே நீர் மேலாண்மை சொல்லிக் கொடுத்த இனம் வெறும் அரை நூற்றாண்டுக்கும் குறைவான காலகட்டத்திற்குள் தண்ணீரைக் காட்சிப் பொருளாக்கி வைத்திருக்கிறோம். எதிர்காலம் கொஞ்சம் இருட்டாகத்தான் தெரிகிறது.

   Delete
 7. ஏரிக்கரையின் மேலே

  முதலாளி திரைப்படத்தில் T M S
  அவர்கள் பாடிய ஏரிக்கரையின் மேலே என்ற பாடல் தலைமுறைகள் பல கடந்தும்
  அனைவரையும் தலையாட்ட வைத்துக்கொண்டிருக்கிறது
  ஏரி அத்துடன் இணைந்த மதகுகள் அதன் மூலம் நீர்ப்பாசனம்
  மாலை நேரங்களில் மதகின்மீது
  அமர்ந்து நண்பர்களோடு கதைப்பேசியது பாடல் பாடியது
  அனைத்தையும் நிணைவுகூறவைத்தது உங்கள் கட்டுரை
  சமீபத்தில் எங்கள் சொந்த ஊராகிய துறையூர் சென்றிருந்தபோது நாங்கள் ஆடி மகிழ்ந்த ஏரியை பார்க்க சென்று
  ஏமாந்து போனேன்
  வடிவேலு ஒரு திரைப்படத்தில்
  கிணறு காணாமல் போனதாக
  காவல்நிலையத்தில் புகார் கொடுப்பார்
  அதேப்போல எங்கள் ஊர் ஏரியை
  காணவில்லை
  கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பில்
  ஏரியின் நடுவில் இருந்த ஐயன் தெப்பகுளம் கூட மறைந்து போய் இருந்தது
  ஒட்டாவா ஏரிகளில் குளிப்பதற்கு
  அனுமதியில்லை என்று எழுதியிருந்தீர்கள்
  எங்கள் ஊர்மக்கள் அனைவருக்கும் குளிக்க இயற்கை
  அழைப்புக்களை தீர்த்து கொள்ள
  ஒரே ஒரு நீர் ஆதாரம்
  இது போக மதகுகள் மூலம் விவசாய தேவைகளுக்கும்
  ஏரிக்கும் எங்கள் ஊர் குடிநீர் குளத்திற்கும் ஒரு தரைவழி இணைப்பு இருக்கும்
  குளத்துக்கு நீர் சிங்கத்தின் வாயில் இருந்து வருவதுபோல ஒரு சிற்பம் இருக்கும்
  ஏரிநீர் குடிக்க சகியாது
  என்ன அற்புதம் நடக்குமோ
  தெரியாது
  குளத்துக்கு வந்த நீர் இளநீராக இனிக்கும்
  வேகாத பருப்பெல்லாம் பூப்பூவாய்
  வெந்துவிடும
  குளத்தின் கரை கற்களால் அமைக்கப்பட்டு அதை ஆலோடி
  என்று அழைப்போம்
  திருட்டு தம் அடிக்க கோலி பம்பரம் கிட்டிப்புல் விளையாட
  அது ஒரு உல்லாசபுரி
  ஏரியில் விடுமுறை நாட்களில்
  காலையில் குளிக்கச்சென்றால்
  கண்கள் சிவக்க வீடு திரும்ப மாலையாகி விடும்
  இந்த ஏரியில் நீர் நிரம்பி கடவாயில் வழியாக நீர் நிறைந்து
  சின்ன ஏரிக்கு பெரிய கால்வாய்
  வழியாக செல்லும்
  எங்கள் வீட்டு கொல்லைக்கதவை
  திறந்தால் அலிபாபாவும் நாற்பது
  திருடர்களும் படத்தில் காண்பது போல தண்ணீர் ஓடும் காட்சியைக்
  காணலாம்
  ஆனால் இன்று பார்த்தால்
  மார்புக்காம்புகள் வற்றிப்போன
  மலட்டுத்தாயாய் எங்கள் ஊர் ஏரி

  ReplyDelete
 8. ஏரிக்கரையின் மேலே

 9. How you got this much talent Sambandhigaru!your writeup and pictures fantastic.Best Wishes for your incredible work.

  ReplyDelete
 10. அருமை அண்ணா..! ஏரிகளும் குளங்களும் "விளை நிலங்களாகி... ரியல் எஸ்டேட் காரர்களின் விழை நிலங்களாகிப்... பின்னர் விலை நிலங்களான" கதையில் இருந்த சொல் விளையாட்டை ரசித்தாலும்.... நெஞ்சம் ஏனோ கொஞ்சம் கனத்துப் போனது.

  ReplyDelete
 11. புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போலுள்ளது. மிகவும் அருமை.

  ReplyDelete