Saturday 10 June 2017

கனடா கனவு தொடர்ச்சி

     முந்தைய பதிவை எழுதி முடித்துப் பதிவேற்றம் செய்துவிட்டு ‘அப்பாடா’ எனத் தலை நிமிர்ந்தேன். எதிரிலே ஃப்ராங்க்பர்ட் விமான நிலைய அதிகாரி கம்பீரமாக நிற்கிறார்.
“யுவர் போர்டிங் பாஸ் ப்ளீஸ்” என்றார்; காட்டினேன். தன் அலைப்பேசியில் ஆய்வு செய்தபின், “உங்களுக்கான விமான ஏறுவாயில் மாற்றப்பட்டுவிட்டது. எண் இருபத்திரண்டுக்குச் செல்லுங்கள்” எனக்கூறி செல்லும் வழியையும் காட்டினார்.

   உடனே கணினிப் பையை முதுகில் மாட்டிக்கொண்டு, பெட்டியை இழுத்துக்கொண்டு, துணைவியாரையும் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு செல்லவும் கடவுச்சீட்டுச் சோதனை தொடங்கவும் சரியாக இருந்தது. எல்லா விமான நிலையங்களிலும் கேட்கப்பட்ட ஒரே கேள்வி: “எதற்காக கனடா செல்கிறீர்கள்?” அதற்கு  “இளைய மகளின் பட்டமேற்பு விழாவில் பங்கேற்கச் செல்கிறோம்” என்பது எனது ஒரே விடையாக இருந்தது. உடனே வாழ்த்துக்கூறி கடவுச் சீட்டில் நாள் முத்திரையைப் பதித்துக் கொடுத்தார்கள்.

    லுஃப்தான்சா விமானத்தின் வயிற்றுக்குள் நுழைந்து உரிய இருக்கைகளில் அமர்ந்தோம். அந்த வரிசையில் எங்கள் இருக்கை முதலில் இருந்ததால் கால்களை நீட்டிக் கொள்ள வசதியாக இருந்தது. முன்னால் பயணிப்போர் தம் இருக்கைககளை எங்கள்மீது சாய்த்து விடுவார்களோ என்ற பயமும் இல்லை. ஒப்பந்தப்படி ஜன்னலோர இருக்கையை இந்தமுறை என் துணைவியாருக்கு விட்டுக்கொடுத்தேன். முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என என் மாமனார் சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்து மின்னலாக மின்னி மறைந்தது.

   பறந்தது பகல் நேரத்தில்  என்றாலும் இந்திய நேரப்படி அது இரவு நேரம் என்பதால் இருவருக்கும் தூக்கம் சொக்கியது. பால் நினைந்தூட்டும் தாயைப்போல ஒரு பணிப்பெண் கனிவுடன் வந்து எழுப்பியபோதுதான் அவள் உணவுத் தட்டுடன் ஒய்யாரமாக நிற்பதைப் பார்த்தேன். என் நல்ல நேரம் நான் பார்த்ததை என் மனைவி பார்க்கவில்லை! பாசுமதி அரிசிச்சாதம், பனீர் குழம்பு, கீரை, தயிர்ப்பச்சடி,கோதுமைப் பாயாசம் என எல்லாமே சுவையாக இருந்தன. உண்டதும் உறக்கம் தொடர்கதை ஆயிற்று. ஏழாயிரம் கிலோமீட்டர் தூரத்தை எட்டு மணி நேரத்தில் கடந்தது விமானம். கனடா நாட்டின் மான்ட்ரீல் பன்னாட்டு விமானநிலையத்தில் விமானம் சரியாக மாலை 4.30 மணிக்குத் தரையிறங்கியது.  சக்கர நாற்காலி ஒன்றில்  என் மனைவி அமர்ந்து செல்ல, நான் ஓட்டமும் நடையுமாக அவளைப்பின் தொடர சோதனைச் சாவடிமுன் நிறுத்தினார் உதவிக்கு வந்த பணிப் பெண்மணி.

அதே வினா; அதே விடை.

   அடுத்து, பெட்டிகளைச் சேகரிக்கும் பகுதிக்குச் சென்றோம். நூற்றுக் கணக்கானப் பெட்டிகள் கன்வேயர் பெல்ட்டில் அணிவகுத்து வந்தன. எங்கள் பெட்டிகளின் கைப்பிடிகளில் வண்ண நாடாக்களை கட்டியிருந்ததால் எளிதாக அடையாளம் கண்டு எல்லாப்பெட்டிகளையும் எடுத்து ஒரு தள்ளுவண்டியில் அடுக்கினேன்.
    வெற்றிநடைப் போட்டு வெளியில் வந்தோம். அன்பு மகள் ஓடிவந்து அம்மாவைக் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தாள். இரண்டாண்டு கால இடைவெளிக்குப்பின் நிகழும் சந்திப்பல்லவா அது! கனடாவில் பணியாற்றும் அவளுடைய வகுப்புத் தோழர் குமரேசன் தன்னுடைய பெரிய காரில் எல்லாப்பெட்டிகளையும் ஏற்றிப் பின் இருக்கையில் அமர, நாங்களும் வசதியாக அமர்ந்து இருக்கைப் பட்டைகளைப் பொருத்திக் கொண்டோம். மகள் சாரதியாகச் செயல்பட்டாள். நான்குவழிச் சாலையில் நூற்று முப்பது கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டிய அழகே அழகுதான்! இரண்டு மணிநேர பயணத்திற்குப் பிறகு இனிதே இல்லம் வந்து சேர்ந்து சேர்ந்தோம்.
மகள் இல்லம் அமைந்துள்ள பல்லடுக்ககம்

   இருபத்து நான்கு மணி நேர பயணத்தால் ஏற்பட்ட களைப்பு உள்ளது. அது நீங்கியதும்      கனடா கனவு தொடரும்.
முனைவர் .கோவிந்தராஜு.
கனடா நாட்டிலிருந்து

     

10 comments:

  1. சுவாரஸ்யமாகப் பறக்கிறது உ கள் கனடா கனவு....தொடர்கிறோம்....

    ReplyDelete
  2. Let the dream continue. Waiting for another interesting anecdote. Passed by your house just half an hour ago. Prof.Pandiaraj

    ReplyDelete
  3. ஐயா உங்கள் கனடா நாட்டுப் பயணம் இனிதே அமையவேண்டும் . உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள ஆவல் ஓங்குகிறது. நானும் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை. மேலும் உங்கள் ஆசிபெற்ற மாணவன்.எனக்கும் 10 ஆண்டுகள் கழித்து இது போன்ற அனுபவம் ஏற்படும் ஐயா.

    ReplyDelete
  4. இனிய பயணம்... இனிய நிகழ்வுகள்..... தொடரட்டும் உங்கள் பயணப் பதிவு.

    ReplyDelete
  5. Super. Write up for the next book ..about the trip to Canada has begun. Enjoy the stay. Time to stay with daughter.Enjoy.

    ReplyDelete
  6. இனிய பயண அனுபவங்கள். தொடர்ந்து எழுதுங்கள். சுவையாக உள்ளது. - இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  7. இனிய பயண அனுபவங்கள். தொடர்ந்து எழுதுங்கள். சுவையாக உள்ளது. - இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  8. கனவு தொடர்ந்தாலும் கற்பனையல்லவே! உங்கள் மகிழ்ச்சியில் புவனா நனைந்திருப்பார். அவருக்கு வாழ்த்துக்கள்.
    நீதிபதி மூ. புகழேந்தி

    ReplyDelete