மாதத்தின் இரண்டாம் ஞாயிறு. மாலை ஐந்து மணி முதல் ஆறு மணிவரை. ‘கூகிள்மீட்’ செயலி வாயிலாக ஓர் இணையவழிக் கூட்டம். நாங்கள் கூடி ஒரு குறளைச் சிந்திப்போம். பெருந்தொற்றுக் காலத்தில் தொடங்கியது இந்தத் திட்டம். இப்போதும் தொடர்கிறது. நடுவில் ஏற்படும் தடங்கலுக்காக வருந்துவதும் உண்டு.
பெருங்கூட்டம் வருமோ? பத்து நூறு பேர்களுக்கு கூட்ட அறிவிப்பைப் பகிர்வேன்.
பத்துப் பன்னிரண்டு பேர் வருவார்கள். சிலசமயம் மூன்று பேர்களை வைத்துக் கொண்டே கூட்டம்
நடத்தியுள்ளேன்.
கூட்ட அறிவிப்பில் சிந்திக்கவுள்ள குறளைக் கொடுத்து விடுவேன். கூட்டத்தில் பங்கேற்கும்
சிலர் அக் குறள் குறித்துத் தம் கருத்தைச்
சொல்வார்கள். பலர் தம் முகம் காட்டாமல் கேட்பவராக இருப்பர். நிறைவாக நான் பகுத்தும் வகுத்தும் கொஞ்சம் தாளிதப் பொருள்களைச்
சேர்த்தும் மூன்று நிமிடங்களில் தொகுத்துச் சொல்லிவிடுவேன். குறள் குறித்த ஒரு தெளிவு
ஏற்பட்ட மன நிறைவோடு கூட்டத்தை முடித்துக் கொள்வோம்.
நேற்று(11-10-26) நடந்த கூட்டத்தில் பேசு பொருளாக நாங்கள் எடுத்துக்கொண்ட குறள்:
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்றுஉற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து (குறள்:1080)
மனிதர்கள் உருவில் ஒன்றாக இருந்தாலும் மனத்தளவில் சான்றோர் கயவர் எனப் பிரிந்து நிற்கிறார்கள். சமுதாயத்தில் சான்றோர் பலராகவும் கயவர் சிலராகவும் இருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இன்று இந்த விகிதத்தில் தலைக்கீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஊரெங்கும் சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ள பார்த்தீனியம் என்னும் நச்சுச்செடிகள்
போல, அழிக்க முடியாத சீமைக்கருவை முள்மரங்கள் போல இந்தக் கயவர்கள் சமுதாயத்தின் அனைத்துத்
தளங்களிலும் நம் கண்ணுக்குத் தெரியாமல் இயங்குகின்றார்கள்.
சான்றோரைவிட வள்ளுவரின் கருத்தைக் கவர்ந்தவர்
கயவர்களே என எண்ணத் தோன்றுகிறது.
கயமை என்னும் அதிகாரத்தின் இரு குறள்களில் மக்களேபோல் கயவர், தேவரனையர் கயவர்
என வஞ்சப் புகழ்ச்சி அணியால் அவர்களை இகழும் வள்ளுவர், ஏழு குறட்பாக்களில் அவர்களின்
கீழ்த்தரமான தீயொழுக்கங்களைச் சுட்டிக்காட்டி, பத்தாவது குறட்பாவாகிய இந்தக் குறட்பாவில்
முத்தாய்ப்பாக ஒரு முடிவுரை எழுதுகிறார்.
கயவர் எதற்கு உரியவர் என்றால், ஒன்று உற்றக்கால் தங்களை விலைபேசி விற்பதற்கு
உரியவர் என்று கூறுகிறார். 'ஒன்று' என்னும் சொல்தான் இக்குறளில் இன்றியமையாத ஒன்று. எந்த
ஒன்று உற்றக்கால் என வள்ளுவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அது காலந்தோறும் மாறக்கூடியது
என்பதால் பொதுவாக ‘ஒன்று’ எனச் சொல்லிவிட்டார். அதேபோல் விரைந்து என்னும் சொல்லும்
குறிப்பிடத் தக்கது. கயவர்கள் பிறர் நலத்தைக் கொஞ்சமும் யோசிக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம்
என்று விரைந்து செயல்படுவார்கள். தந்நலத்தை மட்டும் யோசித்து, தம் எதிரியிடம் அல்லது
எதிரணியினரிடம் எதையேனும் பெரிதாகப் பெற்றுக்கொண்டு, தம்மை அடிமையாக விற்கத் தயங்கமாட்டார்கள்.
இக் குறளுக்கு குன்றக்குடி அடிகளார் தரும் உரை நம்மை மேலும் சிந்திக்க வைக்கிறது.
கயவர் எற்றிற்கு உரியர் எனக் கேட்டுவிட்டு, எந்தத் தொழிலையும் செய்து அறவழியில் வாழும்
திறனற்றவர், எனவே தம்மை பிறருக்கு விற்று அதன் மூலம் பிழைப்பை நடத்தும் இழிநிலை மாந்தர் என உரை எழுதுகிறார்.
சரிதானே?
கயவர் சான்றோராக மாற முடியுமா? முடியும் என்கிறார் வள்ளுவர். ஆண்டாண்டுக் காலமாக
இருளில் கிடந்த வீட்டைத் திறந்து ஒரு சிறு மெழுகுவத்தியை ஏற்றினால் அந்த இருள் விலகுமல்லவா?
அதுபோல, தனக்குள்ளே ஒரு விழிப்புணர்வு என்னும் மெழுகுவத்தியை ஏற்றினால் கயவரும் மாமனிதராய்
மாறலாம்.
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று
இனி அதுபோன்ற ஒழுக்கம் கெட்ட செயலை ஒருபோதும்
செய்யமாட்டேன் என்னும் உறுதியைக் கைக்கொண்டு, பாரதி சொல்வானே ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’
என்று, அப்படியொரு ஞானம் வந்து விட்டால் போதும்; நம் ஊரில் சான்றோர் பெருமக்களே நிறைந்திருப்பர்.
முனைவர் அ.கோவிந்தராஜூ மனநல ஆலோசகர்
No comments:
Post a Comment