Thursday, 6 November 2014

மீண்டும் ஹைக்கூ கவிதைகள்


    என் வலைப்பூவை அடிக்கடி பார்ப்பவர்களில் சிலர் தொடர்ந்து ஹைக்கூ கவிதைகள் எழுதுமாறு மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர். யாரும் சிந்திக்காத கோணத்தில் நான் சிந்திப்பதாக பாராட்டுமழை வேறு பொழிந்தனர். அதற்குப்பிறகும் எழுதாமல் இருக்க முடியுமா?
   போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற கண்ணதாசனின் பாடல் பொருளை ஒருமுறை நினைத்துப்பார்த்துவிட்டு எழுதிய கவிதைகளே பின் வருவன. 

என் வலைப்பூவில்
வண்டுகளோடு இப்போது
வாண்டுகளும்.

தொலைபேசியால்
தொலைந்தது
கடிதம் எழுதும் பழக்கம்.

தொலைக்காட்சியால்
தொலைந்தது
படிக்கும் பழக்கம் 


பாருக்குள்ளே நல்ல நாடு
‘குடி மக்கள் பாடுகிறார்கள்
BARக்குள்ளே நல்ல நாடு

இத் தலைமுறை குழந்தைகள்
தொலைத்தது பென்சிலை மட்டுமல்ல
தம் குழந்தைப் பருவத்தையும்.

கே.ஜி முதல் பி.ஜி வரை
வகுப்புகள் நடைபெறும் ஒரே இடம்
தனிப்பயிற்சி மையம்


யாருக்காக அந்தத்
தங்கப் பதக்கம்?
மேற்கு வானில் சூரியன்.

கடன்கொடுத்தவனைப்
பார்க்கப் பிடிக்காமல் நிலா...
அமாவாசை. 

வானம் முழுவதும்
வண்ண மேகங்கள்
விற்காத பஞ்சு மிட்டாய்

பன்னிரண்டில் நாங்கள்
உலர்கிறோம்., நீ மலர்கிறாய்
மாணவரும்  குறிஞ்சிப்பூவும்.

கவிழ்த்துப்போட்ட
வடைச்சட்டியாய்
வானம்.

வானத் தொலைக்காட்சியில்
ஒலியும் ஒளியும்
இடி மின்னல்.

உருக்கிய வெள்ளியை
ஊற்றியது யார்?
மலை அருவி. 

வானத் தொலைக்காட்சியில்
வண்ண விளம்பரம்
வானவில்.

வருண பகவானின் கோலிக்குண்டுகள்
தரைமீது தவறி விழுந்தன
ஆலங்கட்டி மழை.

குவியாடியில்
உலகமே தெரிகிறது
புல்லின்மேல் பனித்துளி.

சோறு போடும் ஆறு- அதைக்
கூறு போடுவது யாரு?
மனிதன்.

விடிய விடிய
வெல்டிங் வேலையில் வருணன்
மின்னல். 

மலைமுகட்டில் மட்டும் வெயில்
வீடியோ எடுக்கிறானோ
இறைவன்.

குளத்து நீரில்
மிதக்கும் விளக்கு
நிலா.

பூமித்தாய்
நெருப்பைத் துப்புகிறாள்
எரிமலையாய்.

எந்தக் குழந்தை
பூமி கிலுகிலுப்பையை ஆட்டுவது?
நில நடுக்கம்.

ஒதாமல் ஒருநாளும்
இருக்க வேண்டா
பிளஸ் டூ மாணவன். 

கோழி போட்டால் பணம்
மாணவன் போட்டால் ரணம்
நாமக்கல்லில் முட்டை.

இளமையில் கல்
இல்லை இல்லை
இளமையில் நாமக்கல்

பள்ளி மாணவனும்
பண்ணைக்கோழியும் ஒன்றுதான்
நாமக்கல்லில்

குன்றின் மேல் இட்ட
வெண் துப்பட்டா
அருவி.

முதல்நாள் மிடுக்கு நடை
மறுநாள் கடைக்கு எடை
செய்தித்தாள்.





Sunday, 2 November 2014

பெண் என்னும் பெருஞ்செல்வம்


     இன்று உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஈன்றெடுத்த பெருமை யாருக்கு உள்ளது? பெண்களுக்கல்லவா இப்பெருமை வாய்க்கப் பெற்றுள்ளது!. ஆக உலகத்தையே உருவாக்க வல்ல இப்பெண்களின் நிலை நாட்டில் எப்படி உள்ளது? வீட்டில் எப்படி உள்ளது? இந்த இழிநிலைக்கு யார் காரணம்?  

   ஓர் அறிவார்ந்த விவசாயி சேமித்து வைக்க வேண்டிய விதை நெல்லை அவித்து உண்பானா? அல்லது பின்னாளில் நெல்லாய் விளைந்து பசிநீக்கும் என்பதை உணராமல் நாற்றங்கால் நிலையிலேயே அந்த இளம் நாற்றுகளைப் பிடுங்கி எறிவானா? வயிற்றில் வளர்வது பெண்கரு என அறிந்தால் அதை அழிப்பதும் அல்லது பிறந்ததும் பெண் எனத் தெரிந்தால் அதனைக் கொலை செய்வதும் இன்றும் சமுதாயத்தில் நின்றபாடில்லை. இந்த இழிநிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?

     படித்த ஆண்களும் பெண்மையின் அருமை தெரியாமல் திரிகிறார்கள்.

    பெண்களே பெண்களைப் போற்றாத அறியாமையை என்னென்பது!  பெண்களே பெண்களை இழிவுபடுத்தும் மூடநிலை உள்ளதே! பெண்ணே பெண் குழந்தையை வெறுக்கின்றாளே! சில தாய்மார்கள் தம் ஆண் குழந்தையைப் போற்றியும் பெண் குழந்தையைத் தூற்றியும் பேசுவார்கள். இதைத்தான் பாரதி,  மாதர் தம்மையே இழிவு செய்யும் மடமை என்றான்.

   மேலும் அனைத்து நிலையிலும் சம உரிமையைத் தராத அரசியலமைப்புச் சட்டங்கள் பெண்களுக்குத் தடைக்கற்களாக உள்ளன. இப்படிப் பலரும் பலவும் காரணமாகி, பெண்மை என்னும் பெருஞ்செல்வம் அழிந்து வருகிறதோ என்னும் அச்சம் ஏற்படுகிறது.

பெண்ணுரிமைக்காக முதல் முதலாகக் குரல் கொடுத்த பாரதி, பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்று கூவினான்.

  மலைவாழை போன்ற கல்வி அதை வாயார உண்ணுவாய் என் புதல்வி என்று பாடி, சிறுமியரைப் பள்ளிக்கு அனுப்பச் சொன்னார் பாரதிதாசன்.
     
   பெண்ணின் பெருந்தக்க யா உள? என்று போற்றினார் திருவள்ளுவர்.

  மங்கயராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி தேசிக விநாயகம்.

  மனைவி நல வேட்பு நாள்(ஆகஸ்ட் 30) ஒன்றை அறிவித்து மனைவியர் பெருமையை அவர்தம் கணவர்க்கு  உணர்த்தியவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

   பிறந்த ஊரைப் பிரிந்து, பெற்றோரைப் பிரிந்து, உடன்பிறந்தாரைப் பிரிந்து புகுந்த வீட்டில் பதியம் போடப்படும் அந்த இளஞ்செடியை புகுந்த வீட்டில் உள்ள அனைவரும் போற்றி வளர்க்க வேண்டும். குறிப்பாக மாமியார் தன் மருமகளை மறுமகளாக நடத்த வேண்டும்.

   பெண் என்பவள் தூய இன்ப ஊற்று! அன்பின் பெருக்கு! அவள் பிறந்ததும் மழலை பேசி மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறாள். பின்னர் கல்வியில் சிறந்து களிப்படையச் செய்கிறாள். திருமணத்திற்குப் பிறகு மனைவி என்னும் பொறுப்பேற்று மணிவிளக்காய்த் திகழ்கின்றாள். தொடர்ந்து,  தாய் என்னும் நிலையில் தியாகத் திருவுருவாய் விளங்குகிறாள். பின்னர் வயது முதிர்ந்து பாட்டியாகி வழிகாட்டுகிறாள், வணங்குவோரையெல்லாம் வாழ்த்துகிறாள்! குடும்பத்தின் பாரம்பரியம் மற்றும்  அனுபவப் புதையலாய்த் திகழ்கிறாள்.

   எனவே, பெண் என்பவள் வீட்டின் சொத்துகுடும்பத்தின் ஆணிவேர் அவளே. அத்தகைய பெண் என்னும் பெருஞ்செல்வத்தைப் போற்றிக் கொண்டாடுவோம். இல்லையேல் ஒரு கட்டத்தில் திண்டாடுவோம்.


Thursday, 30 October 2014

நலம். நலம் அறிய அவா


 அறிவும் ஆற்றலும் மிகுந்த என் அன்பு மகளுக்கு,

        வாழ்க வளமுடன். அம்மாவும் நானும் நலமாக உள்ளோம். இன்று உன் பிறந்த நாள். உனக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உன் அக்கா பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்து நீ பிறந்தாய். வலிக்கிறதே என்று உன் அம்மா சொன்னபோது மாலை நான்கு மணி இருக்கும். அடுத்த ஐந்து நிமிடத்தில் மருத்துவ மனையில் சேர்த்தேன். ஒரு பட்டியலைக் கொடுத்து உடனே வாங்கி வருமாறு மருத்துவர் கூற மருந்துக்கடையை நோக்கி விரைந்தேன். இருபது நிமிடங்களில் திரும்பினேன். பெண் குழந்தை பிறந்துள்ளாள் என்று செவிலி ஒருவர் மகிழ்ச்சியோடு கூறினார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் நீ தொட்டிலில், அம்மா கட்டிலில்., உன் அக்காவும் நானும் நீ அழுவதையும் அசைவதையும் பார்த்தபடி மகிழ்ச்சியில் திளைத்தோம். கத்தியின்றி இரத்தமின்றி ஒரு யுத்தமின்றி நீ சுகமாகப் பிறந்தாய். அம்மா கொடுத்து வைத்தவள். நானும் அப்படியே. சினிமாவில் வருவதுபோல் அறுவை அரங்கத்திற்கு அருகில் பதட்டத்தோடு நீ என்னைக் காக்க வைக்கவில்லை.

   காலச்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுழல்கின்றது! B.E  பட்டம் பெற்ற கையோடு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையிலும் சேர்ந்துவிட்டாய். இவள்(ன்) தந்தை என் நோற்றான் என்று வள்ளுவர் கூறுவாரே அப்படிப்பட்ட மகிழ்ச்சியில்தான் நான் உள்ளேன்.

   தொடர்ந்து படிக்கப்போவதாகச் சொன்னாய்., மகிழ்ச்சி. படிப்பு ஒன்றுதான் ஒரு பெண்ணுக்குத் தற்சார்பு(self reliance) நிலையை அளிக்கும். பாடநூல்களோடு மற்ற நல்ல நூல்களையும் படி. இது உன் வாழ்வின் பிற்பகுதியில் மறதி நோய்(Alzheimer’s disease) தாக்காமல் உன்னைக்காக்கும். நீ படிக்கும் பழக்கம் உடையவள். நீ பன்னிரண்டாவது படித்தபோது, மறுநாள் பொதுத்தேர்வே என்றாலும் இரவில்  ஆர்.கே.நாராயணன் நாவலில் பத்துப் பக்கமாவது படித்துவிட்டுதான்  உறங்கச் செல்வாய். வாழ்நாள் முழுவதும் படி. அதுவே உன் பொழுதாக்கமாக(hobby) அமையட்டும்.

     பெரிதினும் பெரிது கேள் என்பார் பாரதியார் தன் புதிய ஆத்திசூடியில். நீயும் பெரிய அளவில் சம்பாதிக்கத் திட்டமிடு. ஆனால் அறவழியில் சம்பாதிக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்து. அறத்தான் வருவதே இன்பம் – இதுதான் வள்ளுவர் காட்டும் வழி.

   அடுத்து, நீ பலமுள்ளவள் என்று நினை., சொல்., செயல்படு. ஆணாதிக்கச் சதிகாரர் சிலர் பெண்களை weaker sex என்று முத்திரை குத்திவிட்டார்கள். உண்மையில் பெண்கள்தாம் சக்தி மிகுந்தவர்கள்.  இந்தச் சக்தி மட்டும் இல்லாவிட்டால் ஆண்கள் சிவனே என்று இருக்கவேண்டியதுதான். woman is no longer a weaker sex. In fact, man is the weaker sex.

     உனது நேரத்தில் ஒரு பகுதியை, உனது ஊதியத்தில் ஒரு பகுதியை சமுதாய மேம்பாட்டிற்காகச் செலவிடு. இயலாதவர்களுக்கு உதவி செய்து அவர்களையும் இணைத்துக்கொண்டு வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை(inclusive life)
  வாங்கரி மாத்தாயை நீ அறிவாய். உன்னைவிடச் சிறியவளான மலாலாவை நன்கு அறிவாய். பெண்ணால் சாதிக்க முடியும் என வாழ்ந்துகாட்டியவள் முன்னவள். உலகத்தைத் தன் பக்கம் பார்க்க வைத்துள்ளாள் பின்னவள். இவர்களைப் போல நீயும் சாதிக்க முடியும். உனது வாழ்க்கை பொருளுடையதாய்(wealth) இருந்தால் மட்டும் போதாது., பொருள்(meaning)  உடையதாயும்இருக்கவேண்டும்.

     நிறைவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உன் நாவைக் காத்துக்கொள். எதையும் யாரிடமும் பேசும் முன் சற்று யோசி. சக பயணிகளிடம், முன்பின் தெரியாதவர்களிடம் உன் சொந்த விவரங்களைக் கூறாதே. பேசிய  வார்த்தைகள் கொட்டிய பாலுக்குச் சமம். அதேபோல் வாக்கு வாதம் செய்வது நட்பையும் உறவையும் முறிக்கும். “பெரியவர்களிடம் குறை கண்டால் நான் மவுனமாய் இருந்து விடுவேன்” என்று தன் சத்திய சோதனை நூலில் குறிப்பிடுகிறார் காந்தியடிகள். நீயும் படித்திருப்பாயே. என் அன்பு மகளே! வள்ளுவர்  சொல்வதுபோல் கசடறக் கற்கவும் வேண்டும் கற்றபடி நிற்கவும் வேண்டும்.

    வளரும் பயிருக்குதான் நீர் பாய்ச்ச வேண்டும். அதுபோல உணரக்கூடியவர்களுக்குதான் அறிவுரை நல்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுவார்.(குறள் 718). நீ வளரும் பயிர் என்பதால் சிலவற்றை இம்மடலில் கூறினேன். அவற்றை எண்ணிப்பார்த்துக் கொள்ளுவனக் கொள்ளுக., தள்ளுவனத் தள்ளுக.

உணவும் உறக்கமும் அளவாய் இருக்கட்டும். உற்சாகம் அதிகமாய் இருக்கட்டும்.

என்றும் மாறாத அன்புடன்,
உன் அப்பா

பி.கு:

     நீ விரும்பிய வண்ணம், உன் பிறந்தநாளை முன்னிட்டு இயலாத நூறு முதியவர்களின் ஒருநாள் மதிய உணவிற்காக கரூர் ஞானாலயா வள்ளலார் கோட்டத்தில், நீ தந்த பணத்தில் ரூபாய் ஆயிரம் செலுத்தி, உரிய பற்றுச்சீட்டைப் பெற்று, கோப்பில் வைத்துள்ளேன்.